ஐயோ நெஞ்சே பதறுதே.. "பிறப்பு உறுப்பில் சைக்கிள் ஏற்றி.." 6 வயது இந்திய சிறுமி மீது அயர்லாந்தில் இனவெறி தாக்குதல்
டப்ளின்: அயர்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் மீது மிக மோசமான ஒரு இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. 6 வயதான அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பில் சைக்கிள் ஏற்றிய சிலர், தலையை மூடியே இழுத்தும் முகத்தில் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இந்தியாவுக்கே திரும்ப போ என்றும் சொல்லி மிரட்டியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் செல்கிறார்கள். உலக நாடுகளில் பல்வேறு துறைகளிலும் வல்லுநர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், அதை நிரப்ப இந்தியர்கள் அங்குச் செல்கிறார்கள். அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதேநேரம் இதுபோல செல்லும்போது சில நாடுகளில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதலும் நடக்கிறது.

இனவெறி தாக்குதல்
அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் அயர்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அயர்லாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் வசிக்கும் ஆறு வயது இந்திய வம்சாவளிச் சிறுமி நியா நவீன் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், நியா மீது மிக மோசமான தாக்குதல் நடந்துள்ளது.
வாட்டர்ஃபோர்டு நகரில் உள்ள தனது வீட்டின் வெளியே நியா நவீன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 12 முதல் 14 வயதான சிறுவர்கள் அந்த சிறுமியைத் தாக்கியுள்ளனர். மேலும், நியாவை அழுக்கானவள் என்றும் இந்தியாவுக்கே திரும்பிப் போ என்றும் சொல்லிச் சாடியுள்ளனர். தனது மகளை அந்த சிறார்கள் முகத்தில் குத்தியதாகவும் சைக்கிளால் அவளது அந்தரங்க உறுப்புகளில் தாக்கியதாகவும் சிறுமி நியா நவீனின் தாய் அனுப அச்சுதன் வேதனையுடன் கூறுகிறார்.
யார் இந்த தம்பதி
மேலும், தனது மகளின் கழுத்தில் குத்தி, முடியைப் பிடித்து எழுத்தாகவும் தாய் அனுப கூறுகிறார். கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த அனுப செவிலியராக இருக்கிறார். அவர் கடந்த எட்டு வருடங்களாக அயர்லாந்தில் கணவருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான் அவருக்கு அயர்லாந்து குடியுரிமை கூட கிடைத்தது. இவர்களது குழந்தைகள் அயர்லாந்திலேயே பிறந்தவர்கள். ஜனவரியில் இந்த பகுதியில் புதிய வீட்டில் இவர்கள் குடியேறியுள்ளனர்.
அப்போது முதல் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமலேயே இருந்ததாம். இருப்பினும், திங்கள்கிழமை எல்லாமே மாறிவிட்டது. சம்பவம் நடந்த அன்று இரவு 7.30 மணியளவில் நியா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அனுப ஆச்சுதனுக்கு 10 மாத கைக்குழதந்யைும் இருக்கிறது. அந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்ததால், நியாவை தனியாக விளையாட அனுப்பி இருக்கிறார். அதேநேரம் அவ்வப்போது வீட்டின் முன்புறம் வந்து கவனித்துள்ளார்.
என்ன நடந்தது
உள்ளே திடீரென 10 மாத குழந்தை அழுததால் உணவளிக்க அனுப சில நிமிடங்கள் வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால் அடுத்த நிமிடமே அவரது மகள் நியா முகம் முழுக்க பயத்துடன் வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். இது குறித்து அனுப மேலும் கூறுகையில், "அவளால் பேசக்கூட முடியவில்லை, அவ்வளவு பயந்துவிட்டாள். என் மகளை அப்படி நான் பார்த்ததே இல்லை.
அவளது நண்பர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, அவர்களும் அதிர்ச்சியில் பேச முடியாமல் தவித்தனர். பிறகு ஒருவன் மட்டும் மெல்லப் பயத்துடன் என்ன நடந்தது என்பதைச் சொன்னான். 12- 14 வயதான சிலர் அங்கு வந்ததாகவும் சைக்கிளால் எனது மகளின் பிறப்பு உறுப்புகளில் அடித்ததாகவும், அவளது முகத்தில் குத்தியதாகவும் கூறினான்.
இந்தியாவுக்கே திரும்ப போ
பிறகு நியாவும் ஒரு மாதிரி அச்சத்துடன் என்ன நடந்தது என்பதைச் சொன்னார். ஒருவன் சைக்கிள் சக்கரத்தைத் தனது பிறப்பு உறுப்புகளில் வைத்து அழுத்தியதாகவும் கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டியதாகவும் சொன்னார். மேலும், "இந்தியாவுக்குத் திரும்பிப் போ' என்றும் கூறியதாக எனது மகள் தெரிவித்தார். மேலும், கழுத்தில் குத்தி, தலைமுடியை இழுத்ததாகவும் நியா பயத்துடன் கூறினார். இதை என்னால் நம்பவே முடியவில்லை" என்றார்.
பிறகு உடனடியாக அனுப வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுவர்கள் தன்னையே உற்றுப் பார்த்ததாக அனுப கூறினார். அவர்கள் அனைவரும் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் என்றும் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டே சுற்றித் திரிந்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து அயர்லாந்து காவல்துறையில் நியா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
தண்டனை வேண்டாம்
இருப்பினும், அந்தக் குழந்தைகளுக்குத் தண்டனை வேண்டாம், மாறாக ஆலோசனை தேவை என்று அனுப கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்த நாடே அவர்களுக்குச் சொந்தம் என நினைக்கிறார்கள்.. அவர்களுக்கு இதை பற்றிப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் மற்ற குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் ஒரு பெருமையான இந்தியர்.. அயர்லாந்து குடிமகளாக இருப்பதிலும் மகிழ்ச்சி.. ஆனால் இங்கு அனைவரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். எங்கள் வீட்டின் முன்பே கூட எனது மகளால் பாதுகாப்பாக விளையாட முடியாது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இனிமேல் அவளை எப்படி நம்பி வெளியே அனுப்புவேன் எனத் தெரியவில்லை" என்றார்.
நிலைமை மோசம்
அயர்லாந்தில் இந்திய வம்சாவளியினர் மீதான இனவெறித் தாக்குதல் இது முதல் முறையல்ல. டப்ளினின் டாலக்ட் மற்றும் க்ளோண்டால்கின் பகுதிகளில் அண்மையில் இதுபோல பல இனவெறி தாக்குதல்கள் நடந்துள்ளது. அதிகரித்து வரும் இனவெறித் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அயர்லாந்தில் உள்ள இந்தியக் குடிமக்கள் கவனமாக இருக்குமாறு டப்ளினில் உள்ள இந்தியத் தூதரகம் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்தளவுக்கு அங்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications