இலவச ஹனிமூன், குடும்பத்தாருக்கு பணம்: வாலிபர்களுக்கு வலைவிரிக்கும் ஐஎஸ்ஐஎஸ்
ரக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவரவாதிகள் இலவச தேனிலவு, குடும்பத்தை நடத்த பணம் அளிக்கிறோம் என்று கூறி இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேருமாறு அழைக்கிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளைஞர்களுக்கு பல்வேறு ஆசை வார்த்தை காட்டி அவர்களை தங்கள் அமைப்பில் சேர வைத்து வருகிறார்கள். சாப்ட்வேர் என்ஜினியராக இருந்த அபு பிலால் அல் ஹோம்ஸி(28) என்பவர் தீவிரவாதிகளின் பேச்சுக்கு மயங்கி அந்த அமைப்பில் சேர்ந்துள்ளார்.

சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்ட கருத்துகளை பார்த்து துனிசியாவைச் சேர்ந்த பெண் டாக்டர் அவர் மீது காதல் கொண்டார். ஆன்லைனில் காதலித்த அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அந்த பெண் தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மாறியுள்ளார்.
ஹோம்ஸி தனது காதல் மனைவியுடன் சிரியாவில் உள்ள ரக்கா நகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அளித்த பணத்தை வைத்து ஜாலியாக தேனிலவை கொண்டாடி வருகிறார். மேலும் அந்த அமைப்பு குடும்பம் நடத்தத் தேவையான பணத்தையும் தருவதால் தனக்கு கவலை இல்லை என்கிறார் ஹோம்ஸி.
ரக்கா நகரில் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். ரத்தக் கறை படிந்த நகரில் ஹோம்ஸியோ ஹோட்டல்களில் மனைவியுடன் சாப்பிட்டு, ஐஸ் கிரீம் உண்டு ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இவ்வாறு தான் இலவச தேனிலவு, குடும்பம் நடத்த பணம் தருகிறோம் என்று கூறி தீவிரவாதிகள் இளைஞர்களுக்கு வலைவிரிக்கிறார்கள். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதவ நலத்திட்டம் ஒன்றை தீவிரவாதிகள் துவங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications