36,000 பேரை பலி கொண்ட.. பாலஸ்தீன போர்! மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என இஸ்ரேல் கொக்கரிப்பு
டெல் அவிவ்: 36 ஆயிரம் உயிர்களை பலிகொண்ட பாலஸ்தீன போர் மேலும், 7 மாதங்கள் நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. உலகமே இந்த போருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி இருக்கையில் பாலஸ்தீனம் மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி,
"நாங்கள் இப்போது 2024ம் ஆண்டின் 5வது மாதத்தில் இருக்கிறோம். ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத்தின் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவே, ராஃபா தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐநா கூட இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இருப்பினும் போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications