இதையெல்லாம் நம்பாதீங்க.. ஹமாஸ் மனித குல விரோதி! பணயக்கைதிகள் விடுவிப்பு குறித்து இஸ்ரேல் விமர்சனம்
காசா: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் ஏராளமான பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இந்நிலையில் நேற்று தங்கள் வசம் இருந்த 2 அமெரிக்க பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. ஹமாஸின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 13 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குததில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் ஹமாஸ் படையினைர் தாங்களாக முன் வந்து, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகள் என இருவரை விடுவித்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் பலத்த சந்தேகத்தை தெரிவித்துள்ளது. அதாவது, "மனிதாபிமான அடிப்படையில் ஹமாஸ் செயல்படுவதாக காட்டிக்கொள்கிறது. எனவேதான் தற்போது இரண்டு பணயக்கைதிகளை விடுவித்திருக்கிறது. ஹமாஸ் அடிப்படையில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அமைப்பு இன்னும் ஏராளமான பெண்கள், குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருக்கிறது. அதேபோல மனித குலத்திற்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications