யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. நெதன்யாகு கையை விட்டு போகும் ஆட்சி? அப்போ அடுத்து என்ன நடக்கும்!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் தேர்தலில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது போல தெரியவில்லை. இதுபோல பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அடுத்து என்ன நடக்கும். யார் அங்கு ஆட்சியை அமைப்பார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

இஸ்ரேல் நாட்டில் நேற்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எக்ஸிட் போல் மற்றும் முதற்கட்ட முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளது. இப்போது வரை இந்த இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது.

Israel Election 2026 Israel Netanyahu

கடும் போட்டி

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணிக்கும், முன்னாள் ராணுவத் தலைமை தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் தலா 51 இடங்கள் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது தொங்கு சட்டசபையே அமையும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 61 இடங்களின் ஆதரவு தேவை. ஆனால், எந்தவொரு கூட்டணியாலும் இந்த மேஜிக் நம்பரை எட்ட முடியாது என கணிக்கப்பட்டுள்ளதால், புதிய அரசை அமைப்பதில் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட இழுபறி நீடிக்கலாம்.

தொங்கு நாடாளுமன்றம்

இரு முக்கிய கூட்டணிகளிலும் இடம்பெறாத அரபு கட்சிகளுக்கு 18 இடங்கள் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கணிப்பு உறுதியானால், யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் கேம் சேஞ்சராக இவர்கள் மாறுவார்கள். ஆனால், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என நெதன்யாகு, ஐசன்கோட் என இருவருமே திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இருப்பினும், அரசியலில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்பதால் இது கூர்ந்து கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், நெதன்யாகு மீதான மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதை காட்டுவதாக எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் ஐசன்கோட் தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் கூட்டணி கடுமையான தோல்வியை சந்தித்துள்ளதாக மற்றொரு எதிர்க்கட்சி தலைவரான யாயிர் லாபிட் கூறியுள்ளார். மக்கள் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப விரும்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரும் நெதன்யாகுின் நம்பிக்கைக்குரிய தலைவருமான கிதியோன் சார், எதிர்க்கட்சிகள் அவரசப்பட்டு வெற்றி கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறியுள்ளார். இஸ்ரேலில் லிகுட்தான் மிக பெரிய கட்சி என்றும் நிச்சயம் வெல்லும் எனவும் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்துள்ள நெதன்யாகு, இதற்கு முன்பும் பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து தப்பியுள்ளார். எனவே, இந்த முறையும் எப்படியாவது தனது பிரதமர் பதவியை தக்க வைத்து கொள்வார் என்றே தெரிகிறது.

அடுத்து என்ன நடக்கும்

வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்து நவம்பர் 4ம் தேதி இறுதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். அதன் பிறகு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பின்னர், யாரால் ஆட்சி அமைக்க முடியும் என்று கருதுகிறாரோ அந்த நபரை அரசை அமைக்க அழைப்பார். அதிக இடங்களை பெற்ற தலைவரை தான் முதலில் அழைக்க வேண்டும் என கட்டாயம் இல்லை. யாரால் நிலையான ஆட்சியை தர முடியும் என அதிபர் நினைக்கிறாரோ அவரை அழைக்கலாம்.

அதிபரால் அழைக்கப்படும் தலைவருக்கு முதலில் 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் அதிபர் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கலாம். ஆக மொத்தம் 42 நாட்களுக்குள் கூட்டணியை அமைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கட்சிகள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தும். அமைச்சரவை உள்ளிட்டவை இறுதி செய்யப்படும்.

சிறுபான்மை அரசு

மேஜிக் நம்பர் 61ஐ தொட முடியாமல் போனால்.. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு கூட அமையும். சில நேரங்களில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வது போன்ற முடிவுகளும் கூட எடுக்கப்படும். புதிய அரசு பதவியேற்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். ஏதேனும் அரசியல் கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தால் 61 இடங்கள் இல்லாமலேயே பெரும்பான்மையை நிரூபிக்கவும் முடியும்.

மீண்டும் தேர்தல்

ஒருவேளை அதிபர் அழைக்கும் முதல் நபரால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், அதிபர் மற்றொரு தலைவருக்கு 28 நாட்கள் அவகாசம் அளிப்பார். அவராலும் முடியாவிட்டால் 3வது தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். அவருக்கு அரசை அமைக்க 14 நாட்கள் அவகாசம் கிடைக்கும். அவை அனைத்தும் தோல்வி அடைந்து, யாராலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அப்போது 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும். அதுவரை நெதன்யாகு தலைமையிலான அரசு காபந்து அரசாக தொடரும்.

முதல்முறை இல்லை

இஸ்ரேலில் இதுபோன்ற அரசியல் முட்டுக்கட்ட இதற்கு முன்பும் ஏற்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை மூன்று முறை தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நெதன்யாகுவும் அவரது போட்டியாளரான பென்னி காண்ட்ஸும் பிரதமர் பதவியைச் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் செய்தனர். ஆனால், பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால் அந்த அரசு ஓராண்டுக்கு பிறகு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+