காசாவை போல்... லெபனான் மீதும் தீவிரமான தாக்குதல்.. பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்! பின்னணி என்ன?
இஸ்ரேல்: காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் தற்போது யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லெபனான் மீதான தாக்குதலின் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று 4 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும். இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது வரை 2000 பேர் வரை பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மோதல் நீடிப்பதில் பலி எண்ணிக்கை என்பது இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை பொறுத்தமட்டில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இதற்கிடையே தான் இஸ்ரேலின் அண்டை நாடான லெபனான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மேலும் அடிக்கடி லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பின் மோதலில் லெபனான் பாலஸ்தீனம் பக்கம் உள்ளது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மீது லெபனானின் ஆயுதக்குழுவான ஹெஸ்புல்லா அமைப்பு ராக்கெட் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது.
இது இஸ்ரேலுக்கு பிரச்சனையாக மாறியது. அதோடு இருமுனை தாக்குதலை எதிர்கொள்ளும் சூழலுக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் லெபனானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி லெபனான் நகரங்களில் இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது.
இஸ்ரேலையொட்டிய அரபு அல்-அரம்ஷே நகர் பகுதிகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மேலும் அங்குள்ள ராக்கெட் ஏவுதளம் இஸ்ரேல் பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழப்பு, சேதம் குறித்த விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் லெபனான் தொலைக்காட்சிகளில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இதனால் இஸ்ரேல்-லெபனான் இடையேயான மோதலும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதனால் இந்த மோதல் என்பது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications