"பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமைய விட மாட்டோம்.. அது எங்களுடைய நிலம்!" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் இஸ்ரேலைச் சுற்றி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒருபோதும் பாலஸ்தீனிய அரசு அமையாது என்றும் அந்த பகுதி முழுக்க முழுக்க இஸ்ரேலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலைச் சுற்றிலும் பல மோதல்கள் நடந்து வருகிறது. காசா பகுதியில் ஒரு பக்கம் ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை மோதல் தொடரும் எனச் சொல்லி, இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களுக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பினாலும் கூட தாக்குதல்கள் முடிவுக்கு வரவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் குடியேற்ற நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதாவது அந்த பகுதிக்கு உரிமை கோரும் இஸ்ரேல், அங்குக் குடியிருப்புகளை ஏற்படுத்தி தனது மக்களைக் குடியேற வைக்கிறது. அங்குச் செல்லும் இஸ்ரேல் மக்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்குகிறது. அங்கு சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட E1 என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில் கட்டுமானங்களை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்டகாலமாகவே திட்டமிட்டு வந்தது. இருப்பினும், சர்வதேச சமூகத்திடம் இருந்து வந்த எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்படியொரு சூழலில் தான் ஒருவழியாக இஸ்ரேல் இந்த குடியேற்றத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இடம் ஜெருசலேமிற்கும் இஸ்ரேலிய குடியேற்றப் பகுதியான மாலே அடுமிமிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது பாலஸ்தீனியப் பிரதேசத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பாதைகளுக்கு அருகிலுள்ளது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒருபோதும் பாலஸ்தீன் அரசை அமைய விட மாட்டோம் என தெரிவித்தார். மேலும், அது இஸ்ரேலுக்கு சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "பாலஸ்தீனிய அரசு அமையாது என்ற நமது வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவோம், இந்த இடம் நமக்கே சொந்தம்.. நமது பாரம்பரியம், நமது நிலம், நமது பாதுகாப்பு ஆகியவற்றை நாம் உறுதி செய்வோம். இந்த நகரத்தின் மக்கள் தொகையை இரட்டிப்பாக்கப் போகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications