"வீழ்வேன் என நினைத்தாயோ".. பிரதமர் பதவியை கைப்பற்றும் நெதன்யாகு? யாருமே எதிர்பாராத பெரிய ட்ஸ்விட்
டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எதிர்பாராத பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் திடீரென்று பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து 3 மணிநேரம் வரை பேசி உள்ளார். இவரது ஆதரவு நெதன்யாகுவிற்கு கிடைக்கும் பட்சத்தில் எளிதாக அவரால் பிரதமர் பதவியை கைப்பற்ற முடியும் என்பதால் இந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
இஸ்ரேலில் மொத்தம் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. தனித்து ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தற்போதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி மொத்தம் 27 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அவரது கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தது.

அதேபோல் முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான காடி ஐசன்கோட்டின் 'யாஷர்' கட்சி 21 இடங்களிலும், அவரது கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றது. நெதன்யாகு - காடி ஐசன்கோட் ஆகியோரின் கூட்டணிக்கு மெஜாரிட்டி என்பது இல்லை.இதனால் 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் கிங் மேக்கராக மாறின.
இந்த அரபு கட்சிகள் தற்போது காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் காடி ஐசன்கோட் தான் இஸ்ரேலின் அடுத்த பிரதமராகும் சூழல் இஸ்ரேலில் உள்ளது. இருப்பினும், நெதன்யாகு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை நெதன்யாகு எப்படியாவது பிரதமர் பதவியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளார். நாட்டில் ஒற்றுமை ஆட்சி அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் காடி ஐசன்கோட் அவரது அழைப்பை மறுத்தார். இந்நிலையில் தான் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் முன்னாள் பிரமதர் நப்தாலி பென்னட்டும், பெஞ்சமின் நெதன்யாகுவும் திடீரென்று சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு முதல் முதலாக 1996 ஜூன் 18ல் பிரதமராகி 1999 ஜூலை 8 வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு 2009 மார்ச் 31ம் தேதி மீண்டும் பிரதமரான நெதன்யாகு தொடர்ந்து 2021 ஜூன் 31 வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கட்சி பின்னடைவை சந்தித்தது.
இதனை சாதகமாக பயன்படுத்தி நாப்தாலி பென்னட் அரபு கட்சிகளின் ஆதரவில் 2021 ஜூன் 13 முதல் 2022 ஜூன் 30 வரை ஓராண்டு பிரதமராக இருந்தார். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால தொடர் பிரதமர் பதவிக்கு முட்டுக்கட்டை போட்டார். இது இருவருக்கும் பகையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரது ஆட்சி கலைந்தது. பிறகு யார் லாபிட் 6 மாதம் பிரதமராக இருந்த நிலையில் மீண்டும் நெதன்யாகு பிரதமரானார்.
நாப்தாலி பென்னட் - பெஞ்சமின் நெதன்யாகு இடையே மோதல் இருந்த நிலையில் இருவரும் நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 'லிகுட்' கட்சியின் அறையில் சுமார் 3 மணிநேரம் வரை பேசியுள்ளனர். நாப்தாலி பென்னட் தற்போது இஸ்ரேலில் 'ஒற்றுமை' ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார். நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி தலைமையிலான கூட்டணியும், காடி ஐசன்கோட்டின் 'யாசர்' கட்சி தலைமையிலான கூட்டணியும் ஒன்றிணைந்து ஆட்சியை நடத்த வேண்டும். முதல் பாதியில் காடி ஐசன்கோட்டும், அதன்பிறகு 2வது பாதியில் நெதன்யாகுவும் பிரதமராக வேண்டும் என விரும்பினார். ஆனால் காடி ஐசன்கோட் மறுத்த நிலையில் நாப்தாலி பென்னட், பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துள்ளார்.
தற்போது நாப்தாலி பென்னட் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது 'பென்னட் 2026' என்ற கட்சியும், முன்னாள் பிரதமர் யார் லாபிட் என்பவரின் 'யேஷ் அதித்' என்ற கட்சியும் 'Together' என்ற பெயரில் கூட்டணி அமைத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன. இந்த கூட்டணி மொத்தம் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியை பிடிக்க மொத்தம் 61 இடங்கள் தேவை. தற்போது நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
நாப்தாலி பென்னட் கூட்டணியின் 12 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் நெதன்யாகுவின் கூட்டணி பலம்65 ஆக உயரும். மெஜாரிட்டிக்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தான் என்ற நிலையில் நெதன்யாகுவால் எளிதாக பிரதமராக முடியும் என்பதால் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்பில் நாப்தாலி பென்னட் - பெஞ்சமின் நெதன்யாகு இடையே என்ன பேசப்பட்டது? என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் பகையை மறந்து இருவரும் 3 மணிநேரம் பேசியிருப்பது இஸ்ரேல் அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது. அதோடு பெஞ்சமின் நெதன்யாகு - நாப்தாலி பென்னட் ஆகியோர் சேர்ந்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றனரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
