அடுத்த போரை ஆரம்பிக்கும் "அந்த" ஒரு ஏவுகணை? இஸ்ரேல் பரபர வார்னிங்.. ஹமாசுக்கு இல்லை, இது மேட்டரே வேற
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் போர் தொடர்ந்து வரும் நிலையில், இது அந்த பிராந்தியம் முழுக்க பரவும் ஒரு ஆபத்தான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கி இரண்டு மாதங்களாகப் போர் நடந்து வருகிறது. அப்போது இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகும்.

ஹமாஸின் இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடியைக் கொடுத்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இடையில் சில நாட்கள் போர் நிறுத்தம் இருந்த போதிலும் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
பிராந்திய போர்: அதேநேரம் அண்டையில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் தாக்குதலைச் சரமாரியாக விமர்சித்து வருகிறது. இந்தப் போர் இஸ்ரேல் ஹமாஸை தாண்டி பிராந்திய போராக உருவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. அப்படி மாறினால் அது சர்வதேச அளவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே உலக நாடுகள் அப்படி ஏற்படாமல் இருக்கத் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே இந்தப் போர் இஸ்ரேல்- ஹமாஸை தாண்டி மற்ற பகுதிகளிலும் பரவும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா இஸ்ரேல் படைகளைத் தொடர்ந்து தாக்கி வந்தால் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரெடியாக உள்ளதாகவும் இதனால் லெபனான் தலைநகரம் பெய்ரூட் அடுத்த காசாவாக மாறும் ஆபத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரைச் சந்தித்த நெதன்யாகு அதன் பிறகு பேசுகையில், "ஹிஸ்புல்லா முழுமையான போரைத் தொடங்க முடிவு செய்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். தெற்கு லெபனானும் பெய்ரூட்டும் இங்கிருந்து ரொம்ப தொலைவில் எல்லாம் இல்லை. அது அடுத்த காசாவாக மாறாமல் இருந்தால் போதும்" என்றார்.
முன்னதாக ஏவுகணை தாக்குதலில் வடக்கு இஸ்ரேலில் 60 வயதான இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த ஏவுகணையை ஹிஸ்புல்லா அனுப்பியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டும் நிலையில், அவர்கள் மீதும் போருக்குச் செல்ல ரெடியாகாவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பேரழிவு ஏற்படும்: இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா போரை ஆரம்பித்தால் அதன் பிறகும் நடக்கும் சம்பங்கள் நிச்சயம் அவர்களை வருத்தமடையச் செய்யும் என்றும் நெதன்யாகு கூறினார். ஹிஸ்புல்லாவை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு சக்தியுடன் நாங்கள் தாக்குவோம் என்ற அவர் அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக. 7ஆம் தேதி முதல் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்போது முதலே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா என்பது லெபனான் நாட்டில் இயங்கி வரும் குழுவாகும். இவர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருக்கிறது.
ஈரான் வழிகாட்டுதலைத் தொடர்ந்து ஹஸ்புல்லா தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது. அதேநேரம் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு தாங்கள் எந்தவொரு வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் சுயமாகச் செயல்பட்டு வருவதாகவும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications