வேலையை காட்ட தொடங்கிய இஸ்ரேல்.. காசாவின் மருத்துவமனைகள் அருகே குண்டு வீச்சு! சிதறி ஓடிய மக்கள்
காசா: காசா மீது இஸ்ரேல் 17வது நாளாக இன்றும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை காசாவின் அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடுத்திருக்கிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 16 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. அதற்கு முன்னதாக 17வது நாளான இன்றும் காசா மீது இஸ்ரேல் கடுமையான ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இன்று அதிகாலை காசாவின் அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. ஏற்கெனவே காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து மற்றொரு பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் இஸ்ரேல் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவில் தற்போதைய சூழலில், நிவாரணப்பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. உலகம் முழுவதும் இருந்து எகிப்து வந்து சேர்ந்த நிவாரண பொருட்கள் ராஃபா எல்லை வழியாக காசாவுக்குள் செல்ல காத்திருக்கின்றன. நேற்று இந்த நிவாரண பொருட்களை ஏற்றி வந்த லாரி காசாவுக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் அனுமதி மறுத்ததால் தற்போது வரை ஒரேயொரு லாரி கூட காசாவுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications