"அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.." 248 மைல் தொலைவில் விண்வெளியிலிருந்து வந்த ஆர்டர்! டெலிவரி செய்த ஊபர்!
டோக்கியோ: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஊபர் ஈட்ஸ் ஃபுட் நிறுவனத்திற்கு உணவு ஆர்டர் செய்த நிலையில் அந்த உணவானது பூமியிலிருந்து 248 மைல்களுக்கு அப்பால் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் உட்கார்ந்து கொண்டு அம்பாசமுத்திரத்திற்கு உணவை ஆர்டர் கொடுக்கும் காலம் இது. நாம் இருக்கும் இடத்திற்கோ இல்லை பிறருக்காகவோ உணவை டெலிவரி செய்யலாம்.
இதற்காக ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஊபர் ஈட்ஸ், டன்சோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளன. இவை சேவை கட்டணத்தை பெற்றுக் கொண்டு ரெஸ்டாரண்ட் கட்டணத்தையும் பெற்று கொண்டு பேச்சுலர் மற்றும் குடும்பஸ்தர்களின் உணவு தேவையை சூப்பராக பூர்த்தி செய்து வருகிறது.

பூமியில்
பூமியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வகை வகையாக ஆர்டர் செய்து சாப்பிடுவது பிடிக்குமா என்ன? விண்வெளி ஆராய்ச்சிக்காக பல மைல்கள் தாண்டி வானுக்கு சென்றுள்ளவர்களின் நிலை என்ன? அவர்களுக்கும் ஆசைகள் இருக்குமல்லவா. அது போல் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஊபர் ஈட்ஸ் ஆப்பில் உணவை ஆர்டர் செய்தனராம்.

மனதில் எண்ணம்
லைவ் லொகேஷனை பார்த்த கடைக்காரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததாம். எப்படி கொடுப்பது, யார் மூலம் கொடுப்பது? விண்ணுக்கு உணவை டெலிவரி செய்வதில் சாத்தியம் இருப்பதால்தானே விண்வெளி வீரர்கள் உணவை கேட்டுள்ளனர் என்றெல்லாம் அவர்களின் மனதில் எண்ணங்கள் ஓடியது.

ஊபர் ஈட்ஸ்
இது போன்ற சவாலான விஷயத்தை நாம் ஏன் செய்யக் கூடாது என நினைத்த ஊபர் ஈட்ஸ், இதை வழக்கமாக டெலிவரி செய்யும் நபரிடம் கொடுக்காமல் வித்தியாசமாக டெலிவரி செய்ய யோசித்ததாம். அதன்படி ஜப்பானில் உள்ள தொழில் முனைவோர் யுசாக்கு மேசாவாவை விண்ணுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது.

கோடீஸ்வரர் யுசாக்கு
இதையடுத்து கோடீஸ்வரரான யுசாக்கு வெள்ளை நிற டீசர்ட், நீல நிற ஷார்ட்ஸ், தலையில் தொப்பி அணிந்து கொண்டு 248 மைல்கள் பயணம் செய்து (பறந்து சென்று) சர்வதேச விண்வெளி மையத்தை 8 மணி 30 நிமிடங்களில் அடைந்தாராம். அவர் கையில் பிரவுன் நிறத்தில் ஊபர் ஈட்ஸ் என எழுதியிருந்த பேப்பர் பை வைத்திருந்தார். இதை ஊபர் ஈட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து , டெலிவரி செய்யாத இடங்களுக்கும் செல்கிறது ஊபர் ஈட்ஸ் என போட்டிருந்தது. இந்த சம்பவம் கடந்த 11 ஆம் தேதி நடந்தது.












Click it and Unblock the Notifications