காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து 4 குண்டுவெடிப்பு.. 60 பேர் பலி.. இந்தியா கண்டனம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 13 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றிபெற்றதில் இருந்து அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 12 நாட்கள் ஆகிவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேற உள்ளது.
இந்த நிலையில்தான் மக்கள் ஆப்கானிஸ்தானை காலி செய்து வேறு நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக பெண்கள் பலர் கூட்டம் கூட்டமாக நாட்டை காலி செய்து வெளியேறி வருகிறார்கள்.

பாதுகாப்பு
தாலிபான்களுக்கு கீழ் பாதுகாப்பு இருக்காது என்பதால் மக்கள் இப்படி வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக 2001க்கு முன் தாலிபான் ஆட்சியில் கொடுமைகளை அனுபவித்தது போல அனுபவிக்க நேரிடலாம் என்பதால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். எல்லோரும் காபூல் விமான நிலையம் வழியாகவே வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

மக்கள்
அங்கு தற்போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மக்கள், ஆப்கான் , மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு குண்டு வெடிப்புகளுக்கு பின் விமான நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. மொத்தமாக இதில் 60 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குழந்தைகள்
இதில் குழந்தைகள் பலரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று தாலிபான்கள் கேட்டுக்கொண்ட நிலையில் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து உடனே அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஐஎஸ் பிரிவின் கிளை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் ( Islamic State-Khorasan IS-K) என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
Recommended Video

எச்சரிக்கை
இல்லையென்றால் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவோம் என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது கொடூர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இங்கு இருந்த அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேர் பலியானதாகவும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிகின்றன.உண்மையான பலி எண்ணிக்கை 60க்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

எங்கு
தாலிபான்களும் இதே தகவலை வெளியிட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் மற்றும் பரோன் ஹோட்டல் கேட் அருகே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்தியா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கும் எதிராக உலக நாடுகள் களமிறங்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications