கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர்.. ஒப்புக் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ.. மோடி குறித்தும் பேச்சு
டொரண்டோ: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் மோடி குறித்தும் பேசினார். ஜஸ்டின் ட்ரூடோ கூறும் போது, கனடாவில் மோடிக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டு மொத்த இந்துக்களும் அவருக்கு ஆதரவாளர்கள் இல்லை என்றார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றம் சாட்டி வருகிறது. இந்த படுகொலை சம்பவத்திற்கு இந்தியாவே காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

கனடாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்தியா ஆதாரம் கேட்டது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டுமே சொல்லி வந்தது. அண்மையில் உறுதியான ஆதாரங்கள் இல்லை எனவும் கனடா கூறியது. இருந்தாலும் இந்தியா மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுவதை நிறுத்தவில்லை.
இந்தியா மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதால், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அவரது சொந்த கட்சிக்குள்ளே ஒருபக்கம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்பட்டு வருவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தானியர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் குற்றம் சாட்டினார்.
இப்படி இந்தியா - கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசம் அடைந்துள்ளது. இந்த நிலையில்தான், ஒட்டவாவில் இந்திய சமூகத்தினர் பங்கேற்ற தீபாவளி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவில் இருப்பதாக ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒட்டு மொத்தமாக சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.. கனடாவிலும் மோடிக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்தமாக அவர்கள் கனடாவில் உள்ள இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications