தடுப்பூசியெல்லாம் வேண்டாம்.. எங்கள் ஸ்டைலில் கொரோனாவை ஒரு கை பார்க்கிறோம்.. கிம் ஜாங் உன்!
பியாங்கியாங்: வடகொரியாவுக்கு ஐநா அனுப்ப முடிவு செய்த தடுப்பூசிகளை வேண்டாம் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் ஸ்டைலில் கொரோனாவை கட்டுப்படுத்துவோம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் 200-க்கும் மேற்பட்டவைகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸானது பல்கி பெருகி புதிய பெயர் கொண்ட வைரஸ்களாக உருமாறி வருகிறது.
தற்போது உலக நாடுகள் 3 ஆவது அலை, 4 ஆவது அலை என போய் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாடுகள் 3ஆவது அலையின் தொடக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய காலகட்டத்தில் வடகொரியாவில் இதுவரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என கூறுகிறார்கள்.

உலக நாடுகள்
உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஐநா அனுப்பி வருகிறது. அந்த வகையில் வடகொரியாவுக்கு 3 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்ப முடிவு செய்திருந்தது. ஆனால் கிம் ஜாங் உன்னோ தங்கள் நாட்டுக்கு தடுப்பூசியே வேண்டாம் என்றும் எந்த தடுப்பூசியையும் வாங்க வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெருந்தொற்றை சமாளிக்க
மேலும் அவர் கூறுகையில் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலை சமாளிக்க போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கிய நாள் முதல் வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளால் வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆயினும் கிம் ஜாங் உன் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று இல்லை
வடகொரியாவில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் அதை மருத்துவ நிபுணர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் உன் தோன்றாமல் இருந்தார். அவருக்கு என்னவாயிற்று என்பது கூட நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தது. அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது. கிட்டதட்ட இரும்புத் திரை போட்ட நாடு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லாமே சீக்ரெட் ஆபரேஷன்தான்!

ஊடகங்கள் கருத்து
அண்டைய நாடுகள் அவர் இறந்துவிட்டதாகவும் அவருக்கு உடல்நிலை மோசமடைந்துவிட்டதாகவும் சொல்லி வந்தனர். தென் கொரியாவும் கிம்மை பார்க்க முடியவில்லை என சொல்லி வந்தது. மேலும் சார்ஸ் வைரஸ் பரவிய போது கிம் ஒரு மாத காலம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் பாதுகாப்பாக இருந்தார் என்றும் அது போல் தற்போது கொரோனா பரவலில் சிக்காமல் இருக்க அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
Recommended Video

அனைத்துக்கும் முற்றுப்புள்ளி
எனினும் சில நாட்கள் கழித்து அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் கிம். இதே போல் கடந்த ஏப்ரல் மாதமும் கிம் ஜாங் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லை என்றார். ஆனால் கடந்த மார்ச் மாதம் 19 லட்சம் தடுப்பூசிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் கடும் கட்டுப்பாடுகளால் கடந்த ஜூன் மாதம் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இரு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதே மாதிரி இன்னொரு நாட்டு அதிபர் கூட தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து தப்ப தங்கள் நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த "அதிபர்" யார் என்பது அனைவருக்கும் தெரியும்.












Click it and Unblock the Notifications