இலங்கையை போலவே.. வங்கதேச பிரதமர் இல்லம் சூறை! கையில் கிடைத்ததை எடுத்து சென்ற போராட்டக்காரர்கள்
டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் எப்படி அதிபர் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டார்களோ அதேபோன்ற சம்பவம் தற்போது வங்கதேசத்தில் நடந்திருக்கிறது.
முன்பு பாகிஸ்தானுடன் இருந்த வங்கதேசம், இந்தியாவின் உதவியால் கடந்த 1971ம் ஆண்டில் விடுதலை அடைந்தது. இப்போது அந்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சட்டங்கள் இந்திய சட்டங்களை போலவே இருக்கும். இடஒதுக்கீடு கூட இந்தியாவை போன்றே அங்கும் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறைக்கு காரணமான பிரதமர் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இன்று போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லமான கணபாபனை சூறையாடியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பிரதமர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இன்னும் சற்று நேரத்தில் அந்நாட்டின் ராணுவத் தளபதி மக்களிடையே உரையாற்ற உள்ளார். எனவே, இதில் சில தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் அப்போதைய அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டிருந்தனர். தற்போது இதே பாணியில் வங்கதேசத்திலும் நடந்திருக்கிறது. வங்கதேச பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications