"லண்டன் பிளான் படுதோல்வி!" இம்ரான் கான் பகீர்.. உச்சக்கட்ட குழப்பத்தில் பாகிஸ்தான்! என்ன நடக்கிறது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தாமதமாகி வரும் நிலையில், இது தொடர்பாக இம்ரான் கான் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், அவரது கட்சியினர் பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்தனர்.

இருப்பினும், இம்ரான் கான் ஜெயிலில் இருக்கும் போதிலும் அவரது கட்சியினர் சோர்ந்து போகாமல் தேர்தலை எதிர்கொண்டனர். குறிப்பாக ஏஐ மூலம் இம்ரான் கான் பேசுவது போன்ற வீடியோக்களை உருவாக்கி அதை தங்கள் பிரச்சாரங்களில் பயன்படுத்தினர்.
பாகிஸ்தான் தேர்தல்: இது தேர்தலில் நல்ல பலனைக் கொடுத்துள்ளதைப் பார்க்க முடிகிறது. பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள போதிலும், அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களில் இது தெளிவாகத் தெரிகிறது. அங்கு மொத்தம் 266 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் சுயேச்சை வேட்பாளர்கள் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். அவர்களில் பலர் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்றவர்களாகும்.
அதேநேரம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) 64 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனால் அங்கே தெளிவில்லாத சூழல் இருக்கிறது.
நவாஸ் ஷெரீப்: பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் கட்சி என இரு தரப்புமே தாங்கள் தான் வென்றதாகக் கூறுகிறார்கள். ஏற்கனவே நவாஸ் ஷெரீப் தனது கட்சி வென்றுவிட்டதாக வெற்றி உரையையும் கூட நிகழ்த்திவிட்டார். இதற்கிடையே சில மணி நேரம் கழித்து இப்போது இம்ரான் கான் பேசுவது போன்ற ஒரு வீடியோவை ஏஐ மூலம் ரெடி செய்து அவரது கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
"36 மணி நேரம் ஆச்சு!" இன்னும் பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வரல.. உண்மையில் என்ன காரணம்! பரபர தகவல்
இப்போது அந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுமக்கள் தேர்தலில் அளித்த அமோக ஆதரவால் நவாஸ் ஷெரீப்பின் லண்டன் பிளான் தோல்வியடைந்துவிட்டதாகப் பரபர கருத்துகளை இம்ரான் கான் கூறுவது போல இருக்கிறது. மேலும் அதில், "லண்டன் பிளான் தோல்வியடைந்துவிட்டது. அதற்கு மக்களாகிய நீங்கள் தான் காரணம்.. பாகிஸ்தான் மக்கள் ஷெரீப்பை நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
லண்டன் பிளான்: உங்கள் வாக்குகளின் வலிமையை நீங்கள் பார்த்தீர்கள்.. இப்போது அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். நான் உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து இருந்தேன். நீங்கள் வாக்குப்பதிவு நாளில் அதைக் காப்பாற்றினீர்கள்.. உங்களின் பங்களிப்பால் லண்டன் பிளான் படுதோல்வி அடைந்துள்ளது. குறைவான இடங்களை வென்றுவிட்டு ஷெரீப் வெற்றி பெற்றோம் எனப் பேசுகிறார். இதுவே அவரது அறிவை காட்டுகிறது" என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் கடந்த காலங்களில் லண்டனில் தான் தங்கி இருந்தார். இம்ரான் கான் பிரதமராக இருந்த வரை, எங்குப் பாகிஸ்தான் வந்தால் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் நவாஸ் ஷெரீப் அங்கே தான் இருந்தார். இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்த பிறகே நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்பியிருந்தார். அதை விமர்சிக்கும் வகையிலேயே நவாஸ் ஷெரீப்பின் லண்டன் பிளான் தோல்வியடைந்ததாக இம்ரான் கான் சாடியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பாகக் கவலை தெரிவித்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர்களைக் கைது செய்வது எனப் பல முறைகேடுகள், குறுக்கீடுகள் நடந்துள்ளதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்தன. எனவே, இது தொடர்பாக முறையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications