நெருக்கடியில் சீனா.. தைவான் விஷயத்தில் இனி உஷாரா இருக்கனும்! மறக்க முடியாத சம்பவம் செய்த டிரம்ப்
பெய்ஜிங்: வெனிசுலா விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சீனாவுக்கு இது சரியான எச்சரிக்கையாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தைவானை சுற்றி சமீப நாட்களாக ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டு வந்திருந்தது. விரைவில் தைவானை சீனா சுற்றி வளைக்கும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், வெனிசுலா சம்பவம் சீனாவுக்கு வார்னிங் கொடுப்பதை போன்று அமைந்துள்ளது.
வெனிசுலாவை தொடர்ந்து கொலம்பியாவுக்கும், மெக்சிகோவுக்கும் அமெரிக்க தரப்பில் அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. அதேபோல கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா இனிவரும் நாட்களில் தீவிரமாக இறங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ட்ரம்பின் ஆலோசகர் கேத்தி மில்லர் தனது எக்ஸ் பக்கத்தில், SOON என பதிவிட்டுள்ளார். இதற்கு விரைவில் என்று அர்த்தமாகும்.

இதெல்லாம் வைத்து பார்க்கும் போது, அமெரிக்க ஆக்கிரமிப்பின் தாக்கம் 14,000 கிலோமீட்டர் தள்ளி உள்ள சீனாவில் கூட உணரப்படும் என சொல்லப்படுகிறது. வெனிசுலா அதிபரின் கைது சீனாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வெனிசுலா - சீனா
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ் காலத்திலிருந்து சீனாவும், வெனிசுலாவும் நட்பு நாடுகளாக, நம்பகமான பங்காளிகளாக இருந்திருக்கின்றன. நட்பை தொடர வேண்டும் என்பதற்காக, நிக்கோலஸ் மதுரோ ஆட்சி நிர்வாகத்திற்கு சீனா பக்கபலமாக இருப்பதாக உறுதி அளித்திருந்தது. சீனாவை பொறுத்தவரை தென் அமெரிக்கா நாடுகளில், அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு நாட்டுடன் உறவை வளர்த்துக் கொள்வது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கு இடையில் எண்ணெய் வர்த்தகம் நடைபெற்றது. பின்னர் இது தங்கம், அரிய கனிமங்கள் வரை விரிவடைந்து தற்போது அரசியல் கூட்டணி வரை வளர்ந்திருந்தது.
உறவு சிக்கல்
ஆனால், இந்த உறவுகள் எல்லாம் தற்போது ஆபத்தில் இருக்கின்றன. மதுரோவை நம்பி சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்திருக்கின்றன. தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருப்பதால், சீன நிறுவனங்கள் நிச்சயமற்ற தன்மையில் தள்ளப்பட்டு இருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் சீனாவின் தொடர்புகள் அதிக அளவில் வளர்ந்திருந்தன. பல நாடுகள் சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது. சீனாவுடன் சில நாடுகளில் முதலீடு செய்தது. இதெல்லாம் நடந்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் தற்போது வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
சீனா முதலீடு
டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகளின்படி, 2024இல் சீனா வெனிசுலாவிற்கு $4.8 பில்லியன் பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதேபோல வெனிசுலாவிருந்து எண்ணெய்தான் அதிகமாக ஏற்றுமதியாகியிருக்கிறது. வெனிசுலா எண்ணெய்க்கு சர்வதேச அளவில் அமெரிக்காவின் தடை இருப்பதால், சொந்த நாட்டின் கொடிகளை பயன்படுத்தாமல் மலேசியா, பனாமா போன்ற மூன்றாம் நாடுகளின் கொடிகளின்கீழ் வெனிசுலா கப்பல்கள் எண்ணெய்யை விற்று வந்தன. இந்த விற்பனையை இனி செய்ய முடியாது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்
வர்த்தகம், பணம் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.. மறுபுறம், சீனாவின் உறுதி தன்மை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை உணர முடிகிறது. தைவானை சுற்றி வளைக்க இனி சீனா முயற்சிக்குமா? என்பதுதான் தற்போதைய கேள்வி. நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்பதை அமெரிக்கா தெளிவுப்படுத்தியிருக்கிறது.
இந்த நேரத்தில் தைவானை அட்டாக் செய்தால், இதை காரணமாக வைத்து 3ம் உலகப்போரை அமெரிக்கா தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எனவே சீனா அமைதி காப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை.












Click it and Unblock the Notifications