இந்த ‘பேட்மேன்’ ரொம்ப ரொம்ப குட்மேன்.. இரவு நேரங்களில் எப்படி ஒரு நல்ல காரியம் செய்கிறார் பாருங்கள்!
சிலி தலைநகர் சான்டியாகோவில் பேட்மேன் வேடமிட்ட ஒருவர் இரவு நேரத்தில் ஏழைகளுக்கு உணவு விநியோகித்து வருகிறார்.
சான்டியாகோ: சிலி நாட்டில் இரவு நேரத்தில் மேட்மேன் வேடமிட்ட ஒருவர் ஏழைகளுக்கு உணவு விநியோகித்து பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பல கொடூரங்களை நாம் சந்தித்து வருகிறோம். வேலையிழப்பு, வியாபார நஷ்டம் என பல இன்னல்கள் நம்மை துரத்திக் கொண்டிருக்கின்றன. ஏழை எளிய மக்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
அப்படிப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அப்படி தான் வித்தியாசமான முறையில் ஒருவர் ஏழைகளுக்கு உணவளித்து அசத்தி வருகிறார்.

பேட் மேன் வேடம்
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று சிலி. இந்நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் இரவு நேரங்களில் பேட்மேன் வேடத்தில் வரும் இளைஞர், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். அவரது புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

ஏன் பேட்மேன் வேடம்
இதைக் கேள்விப்பட்டு இரவு நேரத்தில் பேட்மேன் உதவ வரும் இடங்களுக்கு நேரில் சென்றுள்ளனர் சில செய்தியாளர்கள். அப்போது அங்கு வந்த பேட் மேன் இளைஞரிடம், ‘நீங்கள் யார்? எதற்காக பேட்மேன் வேடத்தில் வந்து இந்த உதவிகளை எல்லாம் செய்கிறீர்கள்?' என செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

டயலாக் பேசிய பேட்மேன்
அதற்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர், "உங்களை சுற்றியுள்ள மனிதர்களை பாருங்கள். அவர்களுக்கு சிறிய இடமும், உணவும், ஆறுதலான வார்த்தைகளும் உங்களால் கொடுக்க முடிந்தால் அதைவிட பெரிது வேறெதுவும் இல்லை", என ரஜினி ஸ்டைலில் பதிலளித்துவிட்டு மறைந்துவிட்டிருக்கிறார்.

நிஜ ஹீரோக்கள்
சான்டியாகோ முழுவதும் இப்போது இந்த பேட்மேனை பற்றி தான் பேச்சு. இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் அனைவருமே நிஜ ஹீரோக்கள் தான். அதிலும் வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு உதவும் பேட் மேன்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள் தான்.












Click it and Unblock the Notifications