குலுங்கியது கராச்சி! ஏர்போர்ட் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்? அலறி ஓடிய மக்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டு வெடிப்பு ஏதேனும் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் விபத்தா? என பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் பாகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. விமான நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கராச்சி நகரமே குலுங்கும் அளவுக்கு பயங்கர சத்தம் கேட்டதால், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே வசித்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிகழ்விடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கராச்சி நகரில் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து வெடிப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதலா?அல்லது வேறு ஏதேனும் வெடிப்பு சம்பவவமா என்பது பற்றி தற்போது வரை உறுதியான தகவலும் வெளியாகவில்லை. கராச்சி விமான நிலையம் அருகே ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சில கார்களும் தீ பிடித்து எரிந்தன. விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளன.
விமான நிலையம் அருகே டேங்கர் லாரி வெடித்தததாக சிந்து மாகாண உள்துறை ஜியா உல் ஹசான் லஞ்சர் தெரிவித்துள்ளார். எனினும், டேங்கர் லாரி வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வரும் 15 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால், பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications