மெக்கா கிரேன் விபத்து: பெரிய மசூதி விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ரியாத்: மெக்கா பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.
சவுதிஅரேபியாவின் மெக்கா பெரிய மசூதியில் கடந்த 11ம் தேதி தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ராட்சத கிரேன் முறிந்து மசூதியின் உட்புற வளாகத்தில் விழுந்தது. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்கள் இருவரும் கேரளா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டெல்லியில் கூறியுள்ளார்.

11 இந்தியர்கள் பலி
மெக்கா பெரிய மசூதி விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 9 இந்தியர்கள் உயிரிழந் துள்ளனர், அவர்களையும் சேர்த்து இதுவரை 11 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். உயிரிழந்த 9 இந்தியர்களின் பெயர்கள் தெரியவந்துள்ளன. இதில் இரண்டு பேர் ஹைதராபாத் நகரில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி மெக்கா சென்ற அப்துல் காதிர், பாத்திமா தம்பதியர் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த எஞ்சிய 7 பேர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்படவில்லை.

115 பேர் மரணம்
மேலும் 19 இந்தியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என்று விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார். காயமடைந்தவர்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர், டெல்லி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தலா இருவர், பஞ்சாப், பிஹார், அசாமை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

115 பேர் பலி
மெக்கா மசூதி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியர்களையும் சேர்த்து 115 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சவுதி அரேபிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்லேடன் குரூப்
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கிரேன் முறிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் சவுதி பின்லேடன் குருப் நிறுவன ஊழியர்கள், நேரில் பார்த்த சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறிந்து விழுந்த கிரேன் ஜெர்மனி நிறுவன தயாரிப்பு ஆகும். எனவே அந்த நிறுவனத்திடமும் சவுதி அரேபிய அரசு விவரங்களைக் கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications