99 வயது.. 9 கணவர்கள்.. உண்மை காதலை கடைசி வரை தேடிய பிரபல கவர்ச்சி நடிகை! இப்படியும் நடக்குமா
லாஸ் ஏஞ்சல்ஸ்: பொதுவாகவே திரை பிரபலங்களின் வாழ்க்கை மீது எப்போதும் நமக்கு ஒரு தீராத மோகம் இருக்கும். பிரபலங்களுக்குப் புகழ் வெளிச்சம் இருந்தாலும் உண்மை காதல் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்படி தான் இங்கு ஒரு கவர்ச்சி நடிகை உண்மை காதலைத் தேடி 9 முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
திரை பிரபலங்களின் வாழ்க்கை எப்போதும் பொதுமக்கள் ஏங்கும் ஒரு விஷயமாகவே இருக்கும். அவர்களின் பணம், பெயர், புகழ் எப்போதும் வேற லெவலில் தான் இருக்கும். அதேநேரம் நிலையற்ற தொழில் வாழ்க்கை, தனியுரிமையே இல்லாமல் போவது எனப் பிரபலங்களுக்குப் பல சிக்கல்களும் கூட இருக்கவே செய்கிறது.

உண்மை காதல்
குறிப்பாக பிரபலங்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிப்பதில்லை. அப்படி தான் இங்கு ஒருவர் 99 வயது வரை வாழ்ந்தாலும் கூட கடைசி வரை உண்மையான அன்பு கிடைக்காமல் ஏக்கத்தோடு தான் இருந்துள்ளார். இதற்காக அவர் அதிகபட்சமாக 9 முறை திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார். யார் அவர்.. அவரை பற்றி நாம் பார்க்கலாம்.!
யார் அந்த நடிகை
ஹங்கேரிய- அமெரிக்கக் கவர்ச்சி நடிகை தான் நடிகை ஸா ஸா கபோர் .. இவர் 1933ஆம் ஆண்டு மிஸ் ஹங்கேரி அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 1941இல் ஹங்கேரியிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். பிறகு சில ஆண்டுகளில் அவர் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். 1952இல் வெளியான "லவ்லி டு லுக் அட்" (Lovely to Look At) திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "வி ஆர் நாட் மேரீட்!" (We're Not Married!), "மௌலின் ரூஜ்" (Moulin Rouge) உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
9 திருமணம்
ஹாலிவுட் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட அவர், வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருந்தார். அப்போது ஆடம்பரமான வாழ்க்கைக்காக அவர் அறியப்பட்டார். அவருடன் நேரத்தைச் செலவிடவும், டேட் செய்யவும் பலரும் வரிசை கட்டி நின்றனர். ஆனால் அவருக்கு உண்மையான காதல் கடைசி வரை கிடைக்கவே இல்லை. இதன் காரணமாகவே அவர் 9 முறை திருமணம் செய்ய வேண்டி இருந்தது.
இது தொடர்பாக அவர் ஒரு முறை கூறுகையில், "ஆண்கள் எப்போதும் என்னை விரும்புகிறார்கள், நானும் ஆண்களை விரும்புகிறேன். ஆனால் எனக்கு நல்ல குணம் உள்ள ஒரு ஆண் தேவை.. ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும்.. ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்த ஆண் தேவை" என்று கூறியிருக்கிறார்.
9 கணவர்கள்
அவர் புர்ஹான் பெல்கே (1935இல் திருமணம்; இல் விவாகரத்து), கான்ராட் ஹில்டன் (1942இல் திருமணம்; 1947இல் விவாகரத்து), ஜார்ஜ் சாண்டர்ஸ் (1949இல் திருமணம்; 1954இல் விவாகரத்து), ஹெர்பர்ட் ஹட்னர் (1962இல் திருமணம்; 1966இல் விவாகரத்து), ஜோசுவா எஸ். காஸ்டன் ஜூனியர் (1966இல் திருமணம்; 1967இல் விவாகரத்து), ஜாக் ரியான் (1975இல் திருமணம்; 1976இல் விவாகரத்து), மைக்கேல் ஓ'ஹாரா (1976இல் திருமணம்; 1982இல் விவாகரத்து), ஃபிலிப் டி ஆல்பா (1983இல் திருமணம்; 1983இல் ரத்து செய்யப்பட்டது) என எட்டு பேரைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.
இறுதியாக பிரடெரிக் பிரின்ஸ் வான் அன்ஹால்ட் என்பவரை 1986இல் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் தான் கடைசி வரை நீடித்தது. 9 முறை திருமணம் செய்தாலும் கபோருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருந்தார்
99 வயதில் மரணம்
கோமா நிலையில் இருந்த கபோர், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தனது 99ஆவது வயதில் ரொனால்ட் ரீகன் மருத்துவ மையத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். கரோனரி தமனி நோய் மற்றும் பெருமூளை வாஸ்குலர் நோய் ஆகியவை காரணமாகவே அவர் உயிரிழந்தார். 2011ம் ஆண்டு முதலே அவரது உடல்நிலை மோசமாகவே இருந்த நிலையில், 2016ல் அவர் உயிரிழந்தார்.
கபோரின் சொத்து மதிப்பு
அவர் இறக்கும்போது அவரது சொத்து மதிப்பு சுமார் $40 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டது. அவர் இறந்த பிறகு, அவரது கடைசி கணவர் ஃபிரடெரிக் பிரின்ஸ் வான் அன்ஹால்ட் அவரது சொத்துக்களின் வாரிசானார். கபோரின் ஒரே மகள் பிரான்செஸ்கா ஹில்டன், கபோர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே லாஸ் ஏஞ்சல்ஸில் பக்கவாதத்தால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications