வயசான ரிக்கி பான்டிங் மாதிரியே இருக்காரே.. இவர் யாருன்னு தெரியுமா??
மெக்சிகோசிட்டி: எட்டத்தில் இருந்து பார்த்தால் வயசாகிப் போன ரிக்கி பான்டிங் மாதிரியே தெரியும்.. இன்னொரு கோணத்தில் பார்த்தால் பழைய அனில் கபூர் மாதிரியே தெரியும் இவர்.. லேசுப்பட்ட ஆசாமி இல்லை.. மிக மிக பயங்கரமான போதைப் பொருள் கடத்தல் குழுத் தலைவர்தான் இந்த பார்ட்டி.. பெயர் எல் சாப்போ. மெக்ஸிகோவைச் சேர்ந்தவர். இவரை மெக்சிகோ போலீஸார் வளைத்துப் பிடித்து சிறையில் போட்டுள்ளனர்.
போதைப் பொருள் தாதாக்கள் மெக்சிகோவில் அதிகம். தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு போதைப் பொருள் கும்பல் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு மெக்சிகோவில் போதைப் பொருள் கும்பல்களின் நடமாட்டம் அதிகம்.
இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறும். பலர் சுட்டுக் கொல்லப்படுவார்கள். போலீஸார் இந்தக் கும்பலை ஒடுக்க எத்தனையோ முயன்றும் இவர்கள் அடங்கியபாடில்லை. சர்வதேச அளவில் மிகப் பயங்கரமான போதைப் பொருள் கும்பல்கள் இங்குதான் உள்ளன.

ஜோக்கின் எல் சாப்போ
இந்த நிலையில் ஜோக்கின் "எல் சாப்போ" கஸ்மேன் என்ற போதைப் பொருள் கும்பலின் தலைவரை மெக்சிகோ போலீஸார் கைது செய்துள்ளனர். உலக அளவில் மிகப் பயங்கரமான போதைப் பொருள் தலைவர் கஸ்மேன். செல்லமாக இவரை எல் சாப்போ என்பார்கள்.

2 முறை எஸ்கேப்
இவர் முன்பு கூட இருமுறை கைது செய்யப்பட்டவர். மிக பலத்த பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 2 முறையும் அவர் தப்பி விட்டார். இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட் நடிகர் சீன் பென்னுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அதுகுறித்த செய்தி வெளியானது. இதையடுத்து மெக்சிகோ போலீஸார் அந்த இடத்தைக் கண்டுபிடித்து அங்கு வைத்து எல் சாப்போவைத் தூக்கி விட்டனர்.

மடக்கிப் பிடித்த போலீஸ்
சினலோவா என்ற மாகாணத்தில் உள்ள லாஸ் மோச்சிஸ் என்ற இடத்தில் வைத்து வெள்ளிக்கிழமையன்று எல் சாப்போவைத் தூக்கியுள்ளது மெக்சிகோ போலீஸ்.

சீன் பென்னுக்கு அளித்த பேட்டியால்
சீன் பென், எல் சாப்போவைச் சந்தித்தது ஒரு பத்திரிகை பேட்டிக்காக. ரோலிங் ஸ்டோன் என்ற அந்தப் பேட்டியில் எல் சாப்போ விரிவாகப் பேசியுள்ளார். குறிப்பாக தனது தொழில் குறித்துப் பேசியுள்ளார்.

எவன் செத்தா எனக்கென்ன
தனது தொழிலை நியாயம் கற்பித்து பேசியிருந்தார். மேலும், தன்னால் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து தான் கவலைப்படவில்லை என்றும் அது அவர்களது விதி என்றும் எல் சாப்போ கூறியிருந்தார்.

நின்னுடுமா..
போதைப் பொருள் பயன்படுத்துவோர் அதிகரித்து விட்டனர். இதற்கு நீங்களும் ஒரு காரணமாயிற்றே என்ற கேள்விக்கு., அது தவறு. நான் நாளை சிறைக்குப் போய் விட்டால் எல்லோரும் போதைப் பொருளை விட்டுவிடுவார்களா, கடத்தல்தான் நின்று போய் விடுமா என்று எதிர் கேள்வி கேட்டார் எல் சாப்போ.

மோப்பம் பிடித்த போலீஸ்
மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்தான் இந்த சந்திப்பு நடந்தது. மேலும் சந்தித்த இடத்தையும் மிக ரகசியமாக வைத்திருந்தனர். ஆனாலும் மெக்சிகோ போலீஸார் இடத்தைக் கண்டுபிடித்து விட்டனர்.

எளிதாக சிக்கினார்
பென் பேட்டியை வைத்துத்தான் எல் சாப்போ பதுங்கியிருந்த இடத்தை தங்களால் அடையாளம் காண முடிந்ததாக மெக்சிகோ போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவர் பதுங்கியிருந்த இடம் குறித்து தங்களுக்கு முன்பே தெரிந்திருந்ததால்தான் அந்த இடத்தை எளிதாக அடையாளம் காண
முடிந்ததாக அவர் கூறினார்.

2 பெண்களுடன் தப்பினார்
எல் சாப்போவை முதலில் போலீஸார் முற்றுகையிட்டபோது அவருடன் 2 பெண்களும், ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இதனால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இதனால் எல் சாப்போ அங்கிருந்து ஓடி விட்டார். ஆனால் அவரைப் பின் தொடர்ந்து கண்காணித்த போலீஸார் வெள்ளிக்கிழமை வைத்து அவரை பிடித்து விட்டனர்.

400 வருட சிறைத் தண்டனை கிடைக்கும்
மெக்சிகோ மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பல நீதிமன்றங்களில் எல் சாப்போ மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மெக்சிகோவில் அவர் மீது உள்ள வழக்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 400 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தப்ப முடியாது
இந்த முறை எல் சாப்போவை தப்ப முடியாத அளவுக்கு கிடுக்குப்பிடியாக சிறையில் அடைத்து வைத்து அவருக்கு பெரிய அளவில் தண்டனை வாங்கித் தர மெக்சிகோ அதிகாரிகள் தீவிரமாக உள்ளனராம்.












Click it and Unblock the Notifications