எம்.ஹெச்.17: நெதர்லாந்து எப்படி அப்படி அறிக்கை விடலாம்?- ரஷ்யா கோபம்
மாஸ்கோ: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானம் எம்.ஹெச். 17 பல அதிக சக்திய வாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டதில் வெடித்துச் சிதறியுள்ளது என்ற நெதர்லாந்து விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையம் தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

கோளாறு இல்லை
மலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் விழும் வரை அதில் தொழில்நுட்ப கோளாறோ வேறு எந்த பிரச்சனையோ ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த பொருட்கள்
விமானத்தை அதிக சக்திவாய்ந்த பொருட்கள் தாக்கியதில் அது வெடித்துச் சிதறி தரையில் விழுந்ததாக அறிக்கை கூறுகிறது. ஆனால் அதில் விமானம் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதா என்பது குறிப்பிடப்படவில்லை.

பக் ஏவுகணை
பக் ஏவுகணையை வீசினால் அது பல சக்திவாய்ந்த பொருட்களாக பிரிந்து இலக்கை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நெதர்லாந்து அறிக்கை மலேசிய விமானம் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறது.

புரட்சிப்படை
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் புரட்சிப்படை தான் விமானத்தை பக் ஏவுகணை வீசித் தாக்கியது என்று உக்ரைனும், அமெரிக்காவும் தெரிவித்தன. அந்த ஏவுகணையை அவர்களுக்கு ரஷ்ய அரசு வழங்கியதாக கூறப்பட்டது.

கண்டனம்
நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையை பார்த்த ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விமானம் தாக்கப்பட்டதற்கு ரஷ்ய ஏவுகணை அல்லது ராணுவத்தினர் காரணம் என்று யாரும் கூறிவிடக் கூடாது என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரி
முன்னாள் ரஷ்ய விமானப்படை தளபதியும், ரஷ்ய சிவில் விமான போக்குவரத்து ஏஜென்சியின் தலைவருமான பியாட்டர் டெய்னகின் கூறுகையில், விசாரணை அறிக்கையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். விமானத்தில் ரிப்பேர் இல்லை என்பதை கண்டுபிடிக்க அவர்களுக்கு இத்தனை நாட்கள் ஆனதா என்றார்.

பொறுப்பு இல்லை
நெதர்லாந்து பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறது. விமானத்தின் பாகங்கள், உடல்களை ஆய்வும் செய்யும் முன்பே ஒரு முடிவுக்கு வந்துள்ளது நெதர்லாந்து என்றார் டெய்னகின்.

உக்ரைன் ராணுவம்
மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவம் தான் தாக்கியது என்று ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications