'மிஷன் இம்பாசிபிள்' தீம் இசையை உருவாக்கிய இசையமைப்பாளர்.. லாலோ ஷிஃப்ரின் உயிரிழந்தார்!
வாஷிங்டன்: புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபிளின் 'தீம்' இசையை உருவாக்கிய இசையமைப்பாளரான லாலோ ஷிஃப்ரின் இன்று உயிரிழந்தார். 93 வயதான அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லாலோ, 'மிஷன் இம்பாசிபிள்' மட்டுமின்றி, புரூஸ் லீ-யின் Enter the Dragon உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் தனது இசை பணிக்காக, 5 கிராமி விருதுகளையும், 6 முறை ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு கவுரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவர் ஜாஸ், லத்தீன் அமெரிக்கா மற்றும் கிளாசிக்கல் இசையை கலந்து புதுபாணி இசையை உருவாக்கி திரைப்படங்களுக்கு பயன்படுத்தியிருந்தார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், 1966-ல் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு தீம் இசையை உருவாக்கியதற்காக மட்டுமே சுமார் 3 முறை கிராமிய விருதுகளை வென்றிருக்கிறார். இப்போதுவரை, மிஷன் இம்பாசிபிளின் எல்லா படங்களுக்கும் இந்த தீம் இசைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாலோவின் மரணம் கனத்த மௌனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இத்தனை காலம் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அதேபோல, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், "லாலோவின் மேதைமை மிக்க இசைக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். அவரது இசை "படபடப்பை அதிகப்படுத்தியது, அட்ரினலின் சுரப்பை தூண்டியது, கதைகளுக்கு உயிர் கொடுத்தது. ஒவ்வொரு துடிப்பையும் ஒரு சிலிர்ப்பாக மாற்றிய இசையமைப்பாளரை நாங்கள் என்றென்றும் நினைவில் கொள்வோம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
பியூனஸ் அயர்ஸில் ஒரு இசை குடும்பத்தில் பிறந்த ஷிஃப்ரின், சிறு வயதிலேயே பியானோ பயின்றார். 20 வயதில் பாரிஸுக்குச் சென்று ஜாஸ் இசை பயின்றார். பின்னர் டிஸ்ஸி கில்லெஸ்பி, எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் கவுண்ட் பாஸி போன்ற பிரபலமான கலைஞர்களுடன் மேடையில் இசையமைத்திருக்கிறார். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகு, ஜாஸ், கிளாசிக்கல், சமகால மற்றும் பாப் உள்ளிட்ட பல்வேறு இசை வகைகளை ஒருங்கிணைத்து ஹாலிவுட்டுக்காக இசையமைக்க தொடங்கினார்.
மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு அமைக்கப்பட்ட தீம் இசையை குறித்து அவர் கூறுகையில், "கொஞ்சம் நகைச்சுவை மற்றும் இலகுவான தன்மையில் இந்த இசையை உருவாக்கியிருந்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனால்தான் அந்த இசை உலக அளவில் மிகவும் பிரபலமானது என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications