மலேசியாவில் கூட்டணி பேச்சு?: விஜயகாந்த்- தமிமுன் அன்சாரி பேச்சு; அழகிரி ரகசிய சந்திப்பு
மலேசியா: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், திமுக என எந்தக்கட்சியோடு விஜயகாந்த் கூட்டணி சேருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மலேசியாவில் ரகசிய சந்திப்புகளை நடத்திவருகிறார் விஜயகாந்த்.
மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர்களும், மு.க.அழகிரியும் மலேசியாவில் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல விஜயகாந்த்தை மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மமக அழைப்பு
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணையவேண்டும் என்று ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.

மலேசியா பயணம்
ஆனால் இதற்கு விஜயகாந்திடம் இருந்து எந்த ரியாக்சனும் வரவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதற்காக விஜயகாந்த் மலேசியா சென்றுள்ளார்.

மமக சந்திப்பு
இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

தேர்தல் கூட்டணி
2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.

மதவாத சக்திக்கு எதிரான அணி
அப்போது தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு தேமுதிக துணைபோய்விடக் கூடாது என்றும், திமுக அணிக்கு தேமுதிக வரவேண்டும் எனவும் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் பயணம்
திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் களுக்கான அறிவிக்கப்படாத மாவட்ட செயலராகத் திகழும் பி.எம்.மன்னன் கடந்த 17-ம் தேதி மலேசியா சென்றார். அவருடன் மாநகர் மாவட்ட துணைச் செயலராக இருந்த உதயகுமார், பகுதி செயலர்களாக இருந்த முபாரக் மந்திரி, வி.என்.முருகன், உதயகுமாரின் தம்பி பாலாஜி உள்ளிட்டோரும் மலேசியா சென்றனர்.

அழகிரி ரகசியக் கூட்டம்
இந்நிலையில் மு.க.அழகிரியும் மலேசியா சென்று அங்கு இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளார் என்றும், தன் ஆதரவாளர்களுடன் ரகசியக்கூட்டம் நடத்தச் சென்றுள்ளார் என்றும் வெவ்வேறான தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications