நைஜீரியா: போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 63 பெண்கள், சிறுமிகள் தப்பி வந்தனர்
மைதுகுரி: நைஜீரிய நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி வைத்திருந்தவர்களில் சுமார் 60 பெண்கள் மற்றும் சிறுமிகள் சாதுர்யமாக தப்பி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு முழுமையான முஸ்லிம் அரசை நிறுவ வேண்டும் என ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். 2009-ம் ஆண்டு முதல் தீவிரமாக இயங்கத்தொடங்கிய இவர்கள் இதுவரை ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளனர்.
தற்போது அவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

மாணவிகள் கடத்தல்...
கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி போர்னோ மாநிலத்தில், சிபோக் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் சுமார் 300 மாணவிகளைக் கடத்திச் சென்றனர்.
மிரட்டல்...
சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மட்டுமே அம்மாணவிகளை திரும்ப அனுப்ப இயலும், இல்லையென்றால் அம்மாணவிகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டு விடுவார்கள் என போகோ ஹரம் மிரட்டல் விடுத்துள்ளது.
தொடரும் கடத்தல்கள்...
மற்றநாடுகளின் உதவியோடு மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்தனர். ஆனபோதும், பெண்கள் மற்றும் சிறுமிகளை தொடர்ந்து போகோ ஹரம் கடத்தி வருகிறது.
தப்பித்து வந்தனர்...
இந்நிலையில், நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்டவர்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் தப்பித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு திரும்பினர்...
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எனது சக ஊழியர்கள் அளித்த தகவலின் படி போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 63 பெண்கள் மற்றும் சிறுமிகள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்...
இதற்கிடையே வடகிழக்கு நைஜீரிய நகரான டாம்போவா நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் 4-ந் தேதி இரவு தாக்குதல் தொடுத்தனர். ராக்கெட் மற்றும் கையெறி குண்டு வீச்சுக்களை நடத்தினர்.
53 தீவிரவாதிகள் பலி...
ஆனால் ராணுவத்தினர் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கிகளால் சுட்டு தக்க பதிலடி கொடுத்தனர். இதில் போகோ ஹரம் தீவிரவாதிகள் 53 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த நடவடிக்கைகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் பெண்கள் மற்றும் சிறுமிகள் தப்பி வந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.