மியூனிச் துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம் - இரங்கல்
மியூனிச்: ஜெர்மனியின் மியூனிச் நகரில் 9 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றிரவு நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த கொலை வெறி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலியாகினர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கபட்ட நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகவும் அவருக்கு வயது 18 என்றும் அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளது. மேலும், அவர் ஜெர்மன் மற்றும் ஈரானிய குடியுரிமை பெற்றவர் என்றும் முனிச் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்ந தாக்குதலின் எதிரொலியாக, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கெல் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மியூனிச் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும்,இரங்கல்களும் குவிந்து வருகின்றன.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் முனிக் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
"மியூனிச் நகரில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.இந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்."என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
We are appalled by the horrific incident in Munich. Our thoughts & prayers are with the families of the deceased & those injured.
— Narendra Modi (@narendramodi) July 23, 2016
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மூளையாக செயல்பட்டிருக்கலாம் என ஜெர்மன் காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் என்ன என்று இதுவரை தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதால், வணிக வளாகத்தில் பதுங்கி இருந்தவர்கள் வெளியேறத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications