ரொம்பக் கிட்டப்போய்... ‘செரஸ்’ கிரகத்தை ‘குளோஸ்-அப்’ போட்டோ எடுத்த நாசாவின் ‘டான்’!
நியூயார்க் : நாசாவின் டான் விண்கலம், செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையேயுள்ள செரஸ் கிரகத்தை மிகவும் அருகாமையில் சென்று புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே பல்லாயிரம் கோடி விண்கற்களைக் கொண்ட ஒரு பகுதி உள்ளது. இந்த விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்தப் பகுதியில் தான் செரஸ் என்ற குட்டி கிரகம் (dwarf planet) உள்ளது

விண்வெளிக் கற்களிலேயே பெரிதான செரஸ்-ன் சுற்றளவு 950 கிலோமீட்டர்களாகும். 1801ம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்தக் கிரகத்திற்கு ரோமானிய விவசாய தேவதையின் பெயர் சூட்டப்பட்டது. விண்வெளிக் கற்களிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்ற பெருமையும் செரஸுக்கு உண்டு.
இத்தாலிய விண்வெளி ஆய்வாளரான ஜியூசெப்பே பியாஸி இந்தக் கிரகத்தை எதேச்சையாகக் கண்டுபிடித்தார். ஆனால் இதன் சரியான இடத்தைக் கண்டுபிடித்தவர் கணிதவியல் அறிஞரான கார்ல் காஸ் என்பவர் ஆவார்.
இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘டான்' என்ற விண்கலத்தை விண்கற்கள் குறித்த ஆய்வுக்காக விண்ணில் ஏவியது. 1.7 பில்லியன் மைல் தூரம் பயணித்த டான், கடந்த 2011ம் ஆண்டு வெஸ்டா எனும் சிறுகோளைச் சென்றடைந்தது.
On approach to dwarf planet #Ceres, @NASA_Dawn snapped closest-yet pic of mysterious world: http://t.co/pLGWqR4uRE pic.twitter.com/eDptMajAeZ
— NASA (@NASA) February 5, 2015 வெஸ்டாவில் தங்கி ஓராண்டு கால ஆய்வு மேற்கொண்ட டான், அங்கிருந்தபடி நாசாவிற்கு வெஸ்டாவின் புகைப்படங்களை அனுப்பியது. பின்னர் 2012ம் ஆண்டு செரஸ் கிரகத்தை நோக்கி, டான் தனது பயணத்தைத் தொடங்கியது.
தற்போது செரஸ் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது டான். செரஸ் கிரகத்திற்கு சுமார் 90 ஆயிரம் மைல்கள் அப்பால் உள்ள டான், அங்கிருந்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது.
செரஸ் கிரகத்தை இவ்வளவு அருகாமையில் இருந்து புகைப்படம் எடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்தில் டான் செரஸ் கிரகத்தை சென்றடையும் என நாசா எதிர்பார்க்கிறது. சுமார் 16 மாதங்கள் அங்கிருந்தபடி டான், புகைப்படங்களை அனுப்ப உள்ளது.
செரஸ் கிரகத்தில் பனி மற்றும் கடல் போன்றவை இருப்பதற்காக வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, தொடர்ந்து டான் அனுப்பவுள்ள தகவல்களுக்காக அவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications