நாசாவில் இருந்து இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலா ராஜேந்திரா நீக்கம்.. தொடரும் டிரம்ப் அதிரடி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி பெண்ணான நீலா ராஜேந்திரா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குடியேற்றக் கொள்கை, வரி விதிப்பு, விசா கட்டுப்பாடுகள், ஆட்குறைப்பு என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். டிரம்ப்பின் செயலால் அந்நாட்டில் வசிக்கும் வேற்று நாட்டவர்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

டிரம்ப் அமைச்சரவை
அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் செயல்படும் அரசாங்க திறன் துறை (DOGE) தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் 'டெஸ்லா’, 'ஸ்பேஸ் எக்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் சி.இ.ஓவுமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். எலான் மஸ்க்கின் ஆலோசனையின் படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், அமெரிக்க அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
நீலா ராஜேந்திரா பணி நீக்கம்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைமைப் பதவியில் நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை நீக்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்துக்கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால், இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நீலா ராஜேந்திராவை பணி நீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
யார் இந்த நீலா ராஜேந்திரா?
சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இசை பட்டப்படிப்பை முடித்த நீலா ராஜேந்திரா, வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் 2008 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் 2013ஆம் ஆண்டு கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியின் கிராவிஸ் லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட்டில் தொழில்முனைவோர் முயற்சிகள் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அங்கு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பின்னர் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்க முன்முயற்சியின் (SODI) வடிவமைப்பு இயக்குநர், நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனராகப் பணியாற்றினார். அங்கு அவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
பின்னர், 2021ஆம் ஆண்டு முதல் அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். நாசாவில் பணிபுரிய பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த பெண்களையும் மக்களையும் பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. அவர் இந்த பிரிவின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவால் தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications