டைனோசர் உடன் உலா வந்த புதிய உயிரினம் கண்டுபிடிப்பு! கவசம் போன்ற தோல்.. வேட்டையாடுவதிலும் கூட கிங்
உட்டா: அமெரிக்காவில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு புதிய வகைப் பல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகைப் பல்லி டைனோசர் காலகட்டத்தில் வாழ்ந்தவையாம். இந்த புதிய வகை போல்ஜ் அமோண்டோல் பல்லி கண்டுபிடிக்கப்பட்டது ஏன் முக்கியம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
உலகெங்கும் புதைபடிவ ஆராய்ச்சிகள் நடந்து வருவது குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கடந்த காலத்தை குறித்து ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆய்வு செய்கிறார்கள் என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால், அது அப்படி இல்லை. புதைபடிவ ஆய்வுகள் பழங்கால வாழ்க்கையின் கதையைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் உதவுகிறது.

புதிய புதைபடிவம்
அப்படித் தான் உட்டாவில் ஒரு புதிய புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அருங்காட்சியக சேகரிப்பில் மறைந்திருந்த இந்தப் புதைபடிவத்தை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான் அவை புதிய வகைப் பல்லி இனம் என்று கண்டறிந்துள்ளனர். இந்தப் பல்லி இனத்திற்கு போல்ஜ் அமோண்டோல் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் பல்லி ஒரு காலத்தில் வட அமெரிக்கா முழுக்க சுற்றித் திரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பல்லிக்கு சயின்டிப்பிக் பெயராக 'போல்ஜ் அமோண்டோல்' பல்லி சைஸில் ஒரு ரக்கூனின் அளவுக்கு இருக்கிறது. இவை அதிக எலும்புடன் மற்றும் பாதுகாப்புக் கவசம் போன்ற தோலைக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் புதைபடிவம் உட்டாவின் கைபரோவிட்ஸ் அமைப்பில் காணப்பட்டது. இது மான்ஸ்டர்சார்களின் பழங்கால வேட்டையாடும் குழுவைச் சேர்ந்தது. இன்று வாழும் விஷத்தன்மை வாய்ந்த கிலா மான்ஸ்டர்களின் மூதாதையர்களாகவே இந்த 'போல்ஜ் அமோண்டோல்' கருதப்படுகிறது.
பெயர் காரணம்
"போல்ஜ்" என்பது கற்பனை கதையான 'தி ஹாபிட்' என்ற கதையில் வரும் கோப்ளின் இளவரசனின் பெயராகும். அதே நேரத்தில் "அமோண்டோல்" என்பது டோல்கீனின் எல்விஷ் மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்கு "மேடு-தலை" என்று பொருள். இது பல்லியின் தனித்துவமான மண்டை ஓட்டு அமைப்பைக் குறிக்கிறது. இந்தப் பல்லிக்குக் கூர்மையான பற்கள் மற்றும் கடுமையான தோல் இருக்கிறது. இவை சுமார் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் வாழ்ந்ததாகவும் இவை வேட்டையாடுவதில் கிங்காக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கண்டுபிடிக்கப்பட்டது எப்படி
இந்த புதை படிமமானது 2005ஆம் ஆண்டில் தோண்டப்பட்டாலும் முதலில் இதை யாரும் கவனிக்கவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இது வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு டாக்டர் ஹாங்க் வூலி என்பவரே இதை நோட் செய்து, இது புதிய வகைப் பல்லி என்பதை உறுதி செய்தார்.
டைனாசர் உடன் உலா
இந்தப் புதைபடிவம் முழுமையற்றதாக இருந்தாலும், மண்டை ஓடு, முதுகெலும்புகள், மூட்டு எலும்புகள் மற்றும் தோல் கவசம் (ஆஸ்டியோடெர்ம்கள்) ஆகியவற்றின் பகுதிகள் கிடைத்துள்ளன. போதியளவுக்குப் புதைபடிவங்கள் இருந்ததால் மர்மமான பல்லி குடும்பத்தை பற்றிப் புரிந்து கொள்ள அது உதவி இருக்கிறது. குறிப்பாக, டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இது வாழ்ந்திருக்கிறது. எனவே, அன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் எப்படி இருந்தது... ஒரு இனம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறிந்து கொள்ள இது உதவுவதாக இருக்கிறது.
எப்படி கண்டம் விட்டு கண்டம் சென்றது!
போல்ஜின் நெருங்கிய பல்லி இனம் ஆசியாவின் கோபி பாலைவனத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இது Late Cretaceous காலத்தில் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்குச் சென்றிருக்கலாம் என்கிறார்கள். அப்போது கண்டங்களை இணைக்கும் நிலப்பாலங்கள் இருந்திருக்கலாம் என்ற கருத்தையே இது உறுதி செய்கிறது. டைனோசர்கள் மற்றும் பாலூட்டிகள் இடம்பெயர்ந்ததைப் போலவே இந்த பல்லிகளும் இடம்பெயர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications