22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில்.. அட்ரியன் பிராடி செய்த மாஸ் ‘சம்பவம்’.. தேடி வந்த ஆஸ்கர் விருது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மிகச்சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் அட்ரியன் பிராடி. கடந்த 2002 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை 'தி பியானிஸ்ட்' படத்துக்காக பெற்ற அட்ரியன் பிராடி, 22 ஆண்டுகள் கழித்து தற்போது, 'தி புரூட்டலிஸ்ட்' படத்துக்காக விருதைப் பெற்றுள்ளார்.
'தி பியானிஸ்ட்' படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, மீண்டும் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை தி ப்ரூட்டலிஸ்ட் படத்திற்காக வென்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் அட்ரியன் பிராடி. அன்று இளம் நடிகராக இந்த ஆஸ்கரை பெற்ற பிராடிக்கு இன்று 51 வயது.

அட்ரியன் பிராடி
கடந்த 2003 ஆம் ஆண்டு, 29 வயதான அட்ரியன் பிராடி, ரோமன் போலன்ஸ்கியின் 'தி பியானிஸ்ட்' திரைப்படத்தில், ஹோலோகாஸ்டில் இருந்து தப்பித்த போலந்து-யூத பியானோ கலைஞரான வ்லாடிஸ்லாவ் ஸ்பில்மேன் வேடத்தில் நடித்தார். தனது நடிப்பால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
2002 ஆஸ்கர் விருது
இந்த கேரக்டருக்கு ஒரு பயங்கரமான சேஞ்ச் ஓவர் தேவைப்பட்டது. அட்ரியன் பிராடி 30 பவுண்டுகள் எடையைக் குறைத்து, உலகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பியானோவில் தேர்ச்சி பெற கடுமையாகப் பயிற்சி பெற்றார். இசையை மட்டுமே தனது புகலிடமாகக் கொண்டு, ஆழ்ந்த தனிமையில் இருக்கும் ஒரு மனிதனின் அவரது பேய்த்தனமான பலவீனமான சித்தரிப்பு அந்தப் படத்தில் எதிரொலித்தது.
அந்த நடிப்பே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது, சிறந்த நடிகர் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற இளையவர் என்ற பெருமையையும் பெற்றார் பிராடி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது நடிப்பால் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார் பிராடி.
2024 ஆஸ்கர் விருது
கோர்பெட்டின் தி புரூட்டலிஸ்ட் படத்தில் ஒரு ஹங்கேரிய-யூத கட்டிடக் கலைஞராக நடித்துள்ளார் பிராடி. இரண்டாம் உலகப் போர் வதை முகாமில் இருந்து தப்பிப் பிழைத்த லாஸ்லோ டோத் (பிராடி), புதிய வாழ்க்கை தேடி அமெரிக்காவுக்கு வருகிறார். டோத் கட்டிடக் கலையில் தனது உழைப்பைச் செலுத்தி நினைவுச் சின்னங்களை வடிவமைக்கிறார்.
தி பியானிஸ்ட் படத்துக்கான அவரது உடல் மற்றும் உணர்ச்சி மாற்றம் அன்றைய காலகட்டத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது. தி ப்ரூட்டலிஸ்ட் படத்தில் அவரது பணி வேறுபட்ட பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. இப்போது வயதாகி, ஆழமான வாழ்க்கை அனுபவத்தைப் பெற்ற அவர், முகத்தில் தீவிரத்தைக் கொண்டு வருகிறார். அது பார்வையாளர்களுக்கு படத்தின் உணர்வை உடனடியாகக் கடத்துகிறது.

2 படங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள்
இரண்டு படங்களுக்கும் பொதுவான ஒற்றுமைகள் பல உண்டு.
1. இரண்டு படங்களின் கதாபாத்திரங்களும் போரினால் இடம்பெயர்ந்த ஆண்கள்.
2. இழப்பால் துரத்தப்பட்டவர்கள். உயிர் வாழ்வதற்கான வழிமுறையாக கலையைத் தேர்வு செய்தவர்கள்.
3. தி பியானிஸ்ட் படத்தின் ஸ்ஸ்பில்மேனுக்கு, பியானோ வாசிப்பது மனிதகுலத்துடனான அவரது கடைசி இணைப்பாக இருக்கும். அவரை அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக அவர் காட்டும் ஒரு அமைதியான எதிர்ப்புதான் அவரது இசை.
4. தி புரூட்டலிஸ்ட் படத்தின் டோத்துக்கு, கட்டிடக்கலை என்பது ஒரு எதிர்ப்பின் செயல். அழிவுக்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்புதல். ஆக இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள் தான்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு
ஆஸ்கர் விருதை வெல்வதே ஒரு அசாதாரண சாதனை. அதுவும் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் இடைவெளியில் இரண்டு விருதுகளை வெல்வது என்பது உலகின் மிகச் சில நடிகர்கள் மட்டுமே சாதிக்கக் கூடியது. தனக்கு சவாலான பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் பிராடி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது இடம் இது என உறுதி செய்திருக்கிறார்.
அட்ரியன் பிராடி, இன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் கைதட்டல் அரங்கைப் பிளந்தது. பிராடிக்கு இது இரு தசாப்தங்களுக்கு அடுத்து கிடைத்திருக்கிற மைல்கல். அவர் தனது வாழ்க்கையையும், நடிப்பையுமே காலத்திற்கேற்றார்போல மெருகேற்றிக்கொண்டு புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications