Imran Khan: இம்ரான் கானுக்கு அடிமேல் அடி.. ஊழல் வழக்கில் மேலும் 17 ஆண்டுகள் ஜெயில்.. பாகிஸ்தான் நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவிக்கு மேலும் ஒரு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஊழல் சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு அடிமேல் அடியாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் 80களில் பெரும் ஜாம்பவான் வீரராக திகழ்ந்தவர் இம்ரான் கான். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் குதித்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார்.

தற்போது 73 வயதாகும் இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமர் பதவியை கைப்பற்றினார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியை பிடித்த இம்ரான் கானால், பிரதமராக முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு, பண மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் ஆட்சியை கவிழ்த்தது.
இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை பறிகொடுத்த இம்ரான் கான் மீது அடுத்து ஆட்சியை பிடித்த செபாஸ் ஷெரீப் அரசு அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. 2023 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இம்ரான் கான் மீது 180-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், அல்-குவாதிர் டிரஸ்ட் வழக்கில் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இம்ரான் கானின் மனைவி பஷ்ரா பிபி மீதும் ஊழல் வழக்குகள் பதிவாகி உள்ளன. அவரும் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை நாட்டின் கருவூலத்தில் சேர்க்காமல் தனிப்பட்ட முறையில் விற்றதாக இம்ரான் கான், மனைவி பஷ்ரா பிபி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இருவரும் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அதேபோல, 2021-ம் ஆண்டு சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தின்போது வைர நெக்லஸ், வளையல், விலையுயர்ந்த வாட்ச் போன்றவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.7.15 கோடி ஆகும். ஆனால் தனியார் நிறுவனத்தின் மூலம் ரூ.58 லட்சம் என குறைத்து மதிப்பிட்டு உள்ளனர். பின்னர் ரூ.29 லட்சம் மட்டுமே அரசுக்கு செலுத்தி அந்த நகைகளை தங்களுக்கு சொந்தமாக்கியதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில்தான் இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் மனைவிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று அவரது கட்சி விமர்சித்துள்ளது.













Click it and Unblock the Notifications