பாகிஸ்தானின் திமிர் அடங்கல.. "இந்தியாவுடன் மீண்டும் போர்.. அப்போ பாருங்க.." புதிய சர்ச்சை
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்த மோதலில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானே போர் நிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை என்ற கதையாகத் தொடர்ந்து அந்நாட்டுத் தலைவர்கள் திமிராகப் பேசி வருகிறார்கள். இதற்கிடையே இந்தியாவுடனான போர் தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.. இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனால் அடி வாங்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தானின் திமிர்
ஆனாலும், திமிராகப் பேசுவதை இதுவரை அந்நாட்டுத் தலைவர்கள் நிறுத்தவில்லை. தொடர்ந்து இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.. இதற்கிடையே இந்தியாவுடன் முழு அளவிலான போர் வெடிக்கும் சாத்தியக்கூறுகளைப் புறக்கணிக்க முடியாது என்று சொல்லி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்நாட்டு டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை நாங்கள் புறக்கணிக்கவோ அல்லது நம்பவோ இல்லை. இந்தியா உடன் முழு வீச்சில் போர் வெடிக்கலாம் அதற்கு வாய்ப்பில்லை என நிராகரிக்க முடியாது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையோ, எல்லை தாண்டிய அத்துமீறல்களையோ கூட நிராகரிக்க முடியாது. நாம் முழு விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
முதல்முறை இல்லை
அதேநேரம் பாகிஸ்தான் அமைச்சர் ஆசிப் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. நாட்டின் முக்கிய பதவிகளில் இருக்கும் போதிலும், அந்த பொறுப்பைத் துளியும் உணராமல்.. கவாஜா ஆசிப் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். இம்மாத தொடக்கத்தில் கூட அவர், பாகிஸ்தான் ஒரே நேரத்தில் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அப்போது அவர், "நாங்கள் தயாராக இருக்கிறோம்.. கிழக்கு (இந்தியா) மற்றும் மேற்கு (ஆப்கானிஸ்தான்) எல்லைகள் இரண்டையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.. முதல் சுற்றில் இறைவன் எங்களுக்கு உதவினான், இரண்டாவது சுற்றிலும் அவன் எங்களுக்கு உதவுவான். அவர்கள் இறுதிச் சுற்றை விரும்பினால், போரைத் தவிர வேறு வழியில்லை" என்று பேசியிருந்தார்.
ஆப்கான்
பாகிஸ்தானை பொறுத்தவரை இப்போது ஆப்கான் உடனும் அவர்களுக்கு மோதல் போக்கே இருக்கிறது. எல்லையில் இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளன. அதேநேரம் ஆப்கான் உடனான மோதலுக்கும் பின்னணியில் இந்தியாவே இருப்பதாகப் பாகிஸ்தான் சொல்கிறது. இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றாலும் கூட பாகிஸ்தான் இந்த கருத்துகளையே திரும்ப திரும்பச் சொல்லி, அதை உண்மை என்று உலகை நம்ப வைக்கப் பார்க்கிறது.
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்
இது தொடர்பாக ஆசிப் கடந்த மாதம் ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்டியில், "ஆப்கான் உடன் போர்நிறுத்தம் நீடிக்குமா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது, ஏனெனில் தாலிபான்களுக்கு இப்போது இந்தியா நிதியுதவி செய்கிறது.. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது ஆப்கானிஸ்தான் டெல்லிக்காகவே ஒரு மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது" என்று பேசியிருந்தார்.
போர், மோதல் என எதுவாக இருந்தாலும் தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் இந்தியாவிடம் அடிவாங்கியே வருகிறது. ஆனாலும், கூட அதையெல்லாம் மறைத்துவிட்டு, இந்தியா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சை கருத்துகளைச் சொல்வதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications