கார் முழுக்க வெடிகுண்டு.. பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை படை தாக்குதல்! 12 பேர் உயிரிழப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீரென சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அங்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் தாலிபான்கள், பலூச் போராளிகள் தொடர்ச்சியாகத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

குண்டுவெடிப்பு
இன்றைய தினம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
என்ன நடந்தது
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பிற்பகல் 12.39 மணிக்கு நடந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெடிகுண்டுகளை காரில் எடுத்து வந்த நபர் ஒருவர், அங்கு நீதிமன்றக் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றுள்ளான். இருப்பினும், கட்டிடத்தில் நுழைய முடியாமல் போகவே.. அந்த நபர் 10 முதல் 15 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்துள்ளான். பிறகு அங்கிருந்த ஒரு போலீஸ் வாகனத்திற்கு அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக நக்வி கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் காயமடைந்த வழக்கறிஞர்கள் அதிர்ச்சியில் அங்கு அமர்ந்திருப்பது தெரிகிறது. மேலும், அவர்களின் சட்டைகளில் ரத்தக்கறைகள் தெளிவாகத் தெரிந்தன.
பல கிமீ வரை கேட்ட சத்தம்
இது ஒரு கார் குண்டுவெடிப்பு என பாகிஸ்தான் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இது மிகவும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பாக இருந்துள்ளது. இதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்குக் கூட கேட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதனால் நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களும் மோசமாகச் சேதமாகின.
மக்கள் அதிகம் கூடும் விசாரணை நடக்கும் நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே தீவிரவாதத் தாக்குதல்களால் போராடி வருகிறது. இப்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ள பாகிஸ்தான் தாலிபான் அமைப்பும் அந்நாட்டு அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த வாரம் கூட ராணுவ கல்லூரியில் பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்த முயன்ற தாக்குதலை முறியடித்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்
மேலும், சமீப காலங்களாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரர்கள், பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் என பலர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வன்மம்
நேற்றைய தினம் டெல்லியில் மிக மோசமான கார் வெடிப்பு சம்பவம் நடந்ததிருந்தது. இதில் 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் இதனால் அதிர்ச்சி அடைந்தது. பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவித்து வந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் குண்டுவெடிப்பு குறித்த போட்டோவை பகிர்ந்து, சிரித்தும் நக்கலடித்தும் வந்தனர். ஆனால், இது நடந்து 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்திலேயே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுபோல தொடரும் தாக்குதல்களைக் கூட தடுக்க முடியாத அளவுக்கே அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை இருக்கிறது.












Click it and Unblock the Notifications