இந்தியாவின் ஒற்றை மூவ்.. சிந்து நதி நீர் இல்லாமல் கதிகலங்கிய பாகிஸ்தான்! இப்போ கையை பிசைகிறார் பிரதமர் ஷெரீப்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இது பாகிஸ்தானுக்குப் பெரிய தலைவலியாக மாறியது. மேலும், சிந்து நீரை நாட்டிலேயே பயன்படுத்த உட்கட்டமைப்பு பணிகளையும் இந்தியா அணைகளை அமைக்கும் பணிகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த மே மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

கதிகலங்கிய பாகிஸ்தான்
இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தான் கதிகலங்கிப் போய் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் பாகிஸ்தானின் பஞ்சாப் உட்படப் பல மாகாணங்களில் நீர் பஞ்சம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்ன செய்வதென்றே புரியாமல் இருக்கிறார். ஏதேதோ திட்டங்கள் மூலம் நிலைமை சமாளிக்கப் பார்க்கிறார். இதற்கிடையே நிலைமை சமாளிக்க பாகிஸ்தானின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தேசிய அவசரக் காலச் செயல்பாட்டு மையத்திற்குச் சென்றிருந்த அவர், அங்கு ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் இதற்கு இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் குற்றம் சாட்டினார். இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு எதிராகச் செயல்படுவதாகவும் ஷெரீப் கூறினார்.
இந்தியாவின் நடவடிக்கை
அதேநேரம் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை எல்லாம் எடுக்கவில்லை. கடந்த காலங்களில் போர், ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலின் போதும் கூட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா எதுவும் செய்யவில்லை. ஆனால், இந்த முறை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பஹல்காமில் அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாகவே தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது.
சமாளிக்கும் பாகிஸ்தான்
இது தொடர்பாக ஷெரீப் மேலும் கூறுகையில், "இந்தியாவின் இந்த நடவடிக்கையைச் சமாளிக்க நாங்கள் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கவும் நீர் சேமிப்பு மையங்களைப் புதிதாக உருவாக்கவும் முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தான் தனது சொந்த வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கும். அதில் சிந்து நதியில் அமைக்கப்படும் தியாமர் பாஷா அணையும் அடங்கும்" என்றார்.
நீர் சேமிப்பு திறனை உருவாக்குவது குறித்துச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ஒரு தெளிவான விதி உள்ளது என்றும் ஷெரீப் குறிப்பிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கும் என்றும், இந்த முன்னெடுப்பில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஷெரீப் கூறினார்.
மிரட்டல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா தர மறுத்தால்.. பாகிஸ்தான் போர் தொடுக்கும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியிருந்தார். இருப்பினும் பூட்டோவின் கருத்துகளை எல்லாம் இந்தியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது குறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டில் கூறுகையில், "இதுபோன்ற பொய்யான மிரட்டல்கள் குறித்து இந்தியா கவலைப்படவில்லை. தண்ணீர் எங்கும் போகாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
இந்தியா தனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதம் இருந்தால் தண்ணீர் இல்லை.. ஆனால், பாகிஸ்தான் இந்த விவகாரத்தைச் சர்வதேச அளவிலும் எழுப்ப முயல்கிறது. ஆனால், எதுவுமே அவர்களுக்குப் பலன் தருவதாக இல்லை. இதன் காரணமாகவே நிலைமையைச் சமாளிக்கும் பணிகளில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications