"அமைதி தேவை.. சுமுக உறவை விரும்புகிறோம்!" நேரடியாக மோடிக்கு கடிதம் எழுதிய பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்; பாகிஸ்தான் நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைச் சமாளிக்கத் தவறியதால், அவருக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.
இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. கூட்டணிக் கட்சியில் இருந்தும் சிலர் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பியதால் அவரது அரசு கவிழ்ந்தது.

புதிய பிரதமர்
இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் இரு நாடுகளுக்கும் இடையே பல விவகாரங்களில் அர்த்தமுள்ள ஈடுபாடு தேவை என்று அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஷெபாஸ் ஷெரீப்பிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதிய நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஷெபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்தில் தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது..

கடிதம்
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுடன் இந்தியா ஆக்கப்பூர்வமான உறவை விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஷெரீப்பை வாழ்த்திய பிரதமர் மோடி, பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது என்றார். அப்போது தான் பயங்கரவாதத்தைத் தவிர்த்து, வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி, மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதிசெய்ய முடியும்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

பிரதமர் மோடி
இதற்குப் பதில் அளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "வாழ்த்துகளுக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா உடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளைப் பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு என்பது இன்றியமையாதது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டது. சமூக-பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்,

இந்தியா பாகிஸ்தான்
இரு நாடுகளுக்கும் இடையே காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளைப் பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடன் இயல்பான அண்டை நாட்டின் உறவை விரும்புவதாகவே இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி, 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கம் ஆகியவற்றுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications