திணறும் ஷெரீப் அரசு! ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மெகா போராட்டம்! பாக்.- சீனா நெடுஞ்சாலை முடக்கம்
காஷ்மீர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இப்போது மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஷெரீப் அரசுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கரகோரம் நெடுஞ்சாலையை மறித்துள்ள இந்த மக்கள் அங்குப் போக்குவரத்தை முழுமையாக முடக்கியுள்ளனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் சில குறிப்பிட்ட பகுதிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கிறது. அந்த பகுதி இப்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் பகுதியை மீண்டும் இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் தொடர்ச்சியாக இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

போராட்டம்
இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியில் திடீரென மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ள மக்கள், சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கரகோரம் நெடுஞ்சாலையை மறித்துள்ளனர். அதுவும் கடந்த 3 நாட்களாக இந்த நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல்களுக்கு அரசு உதவினாலும் கூட வர்த்தகர்களுக்கு உதவ ஷெரீப் அரசு தவறிவிட்டதாகச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (POK) ஒரு பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள கரகோரம் நெடுஞ்சாலையில் இதனால் 3வது நாளாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஷெரீப் தலைமையிலான அரசின் வர்த்தகக் கொள்கைகளைப் போராட்டக்காரர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
பல ஆயிரம் பேர்
கில்கிட்-பால்டிஸ்தானின் குல்மத் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த சாலையில் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என்று முடக்கியுள்ளனர். ஹன்சா, கில்கிட் மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதே போராட்டத்தின் பிரதான சிக்கலாக இருக்கிறது. முன்னதாக கடந்த மாதம் தான் இங்குள்ள இயற்கை வளங்களை எளிதாக வெட்டி எடுக்கப் பாகிஸ்தான் அரசு ஒரு மசோதாவை கொண்டு வந்திருந்தது. அந்த மசோதாவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களும் வெடித்திருந்தது. இப்போது சில வாரங்களில் மீண்டும் மிகப் பெரிய போராட்டம் அங்கு வெடித்துள்ளது
திணறும் பாக். அரசு
அவரது ஷெரீப் அரசின் வர்த்தக கொள்கை சுரண்டலுக்கு வழிவகுப்பதாகவும் அவை பொருளாதாரத்தையே மொத்தமாக காலி செய்வதாகவும் சாடி வருகிறார்கள்.. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அங்குள்ள சோஸ்ட் என்ற பகுதி வழியாகவே உள்ளே வரும். ஆனால், அது கடந்த ஆறு மாதங்களாக மூடியிருந்ததால் சுங்க அனுமதி கிடைக்கவில்லை. இது குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பல முறை கூறியும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
இதனால் தங்களுக்கு மிகப் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லியே போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ஷெரீப் அரசு திணறி வருகிறது
முதல்முறை இல்லை
முன்னதாக கடந்த அக்டோபர் 2023இல், இதே கில்கிட்-பால்டிஸ்தானின் மாவட்டத்தில் இன்னொரு போராட்டம் வெடித்திருந்தது. அப்போது பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகம் நிலவியதால்... இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்தியாவில் கார்கிலுக்கான பாதையைத் திறக்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சிலர் தேச துரோக வழக்குகளிலும் அப்போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications