காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி எங்கள் நாட்டைச் சேர்ந்தவனில்லை.. மூடி மறைக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் : காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி எங்கள் நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்றும், அதற்கான ஆதாரம் இருந்தால் இந்தியா தர வேண்டும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கேட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சம்ரோலி அருகே உள்ள நர்சூ என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் மறைந்து இருந்த 2 தீவிரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

பின்னர் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களில் 5 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றான். சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் பள்ளி ஒன்றில் பதுங்கி இருந்த அந்த தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் உயிருடன் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவன் பாகிஸ்தான் தீவிரவாதி முகமது நவீத் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் பிடிபட்ட தீவிரவாதி எங்கள் நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்யது காசி கலிலுல்லா கூறியதாவது...
இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதி பிடிபட்டதாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். இதுகுறித்த ஆதாரங்களை இந்தியா எங்களிடம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் மீது இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டுவது சரியல்ல. எங்கள் மீது குற்றம் சாட்ட தகுந்த ஆதாரம் வேண்டும்.
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது. அடிக்கடி இதுபோல் பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய தகவல் மற்றும் பதிவு ஆணையத்தின் ஆவணங்களின்படி, இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அல்ல என்று தெரியவந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications