பாகிஸ்தான் டிவி சேனல்களில் இந்திய படங்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை
லாகூர்: பாகிஸ்தானில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிவி சேனல்களில் ஒளிபரப்ப அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், இந்திய எதிர்ப்பு சிந்தனை உள்ளவருமான முபஷீர் லுக்மான் பாகிஸ்தானில் இந்திய படங்கள், தொலைக்காட்சி தொடர்களை டிவியில் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது லுக்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளை மீறி இந்திய படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் பாகிஸ்தானுக்குள் கடத்தி வரப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் முழுக்க முழுக்க இந்தியாவில் எடுக்கப்பட்டு இந்தியரால் ஸ்பான்சர் செய்யப்படும் படங்களை பாகிஸ்தானில் திரையிடக் கூடாது என்று வாதாடினார். என்ன தான் விதிகளை மீறி அதிக அளவில் இந்திய படங்கள், தொலைக்காட்சி தொடர்களை காண்பிக்கும் தொலைக்காட்சிகளுக்கு அபராதம் விதித்தாலும் அது தொடரத் தான் செய்கிறது என்று மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து வெளிநாட்டு படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் குறிப்பாக இந்திய நிகழ்ச்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தானில் உள்ள டிவி சேனல்கள் 10 சதவீதம் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அந்நாட்டு தகவல் தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications