எங்கே செல்வது? ஈரானில் தவித்த இந்திய யூடியூபர்.. நெகிழ வைத்த பாகிஸ்தான் மாணவர்.. இதுதாங்க பாசம்
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்ற இந்தியன் விலாக்கர் உதவியின்றி தவித்தபோது பாகிஸ்தான் மாணவர் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு அழைத்து சென்று உதவிகள் செய்தார். அதேபோல் அவருக்கு ஏர்போர்ட்டில் பழக்கமான இன்னொருவர் நம் நாட்டு விலாக்கரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று உணவு வழங்கி ஓய்வெடுக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட நம் நாட்டை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் குறித்த விஷயங்களை வீடியோவாக்கி யூடியூப் சேனல்களில் பதிவேற்றி வருகின்றனர். அப்படியான ஒரு டிராவல் விலாக் யூடியூப் சேனல் தான் ‛On Road Indian’.

இவர் ஆன் ரோட் இந்தியன் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். ஐஐடி டிராப் அவுட் மாணவரான இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று வீடியோக்கள் எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் சென்ற நாடு தான் ஈரான். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் அவர் இறங்கி பிற இடங்களுக்கு செல்ல நினைத்தார். ஆனால் அவருக்கு இண்டர்நெட் சேவை கிடைக்கவில்லை. விபிஎன் பயன்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர் சிரமப்பட்டார். புதிய சிம் கார்டும் அவர் வாங்கி வைக்கவில்லை. இதனால் அவர் எங்கு செல்வது என்று தவித்தார்.
இந்த வேளையில் தான் அந்த விலாக்கருக்கு அறிமுகம் ஆனார் உசேன். இவர் யார் என்றால் பாகிஸ்தானை சேர்ந்த மாணவர். இவர் பாகிஸ்தானில் இருந்து ஈரானில் தங்கி படித்து வருகிறார். இவர் விலாக்கருக்கு உதவி செய்தார். விலாக்கருக்கான தேவையான விபிஎன் கனெக்சன் பெற உதவினார். அதுமட்டுமின்றி ஹோட்டல் எப்படி முன்பதிவு செய்ய வேண்டும். எங்கு முன்பதிவு செய்ய வேண்டும். சிம்கார்டு எப்படி வாங்க வேண்டும் என்று அவர் விளக்கி கூறினார்.
அதுமட்டுமின்றி உசேன், அந்த விலாக்கரை தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படி கூறி சிம்கார்டு வாங்கி கொடுத்து உதவினார். அதன்பிறகு ஏர்போர்ட்டில் பழகிய இன்னொரு நபர் விலாக்கரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று இரவு உணவு வழங்கி நெகிழ வைத்தார்.
இதுதொடர்பான வீடியோவை அந்த விலாக்கர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். 'First Day in Iran. Never Expected This’ என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ‛‛நான் ஒருவரை இங்கு சந்தித்தேன். அவரது பெயர் உசேன். பாகிஸ்தானை சேர்ந்தவர். ஈரானில் எனக்கு என்னென்ன விஷயங்கள் தேவை என்பதை அவர் விளக்கி உள்ளது. நான் அவரை இங்கு கண்டதற்கு கடவுளுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பாகிஸ்தான் மாணவர் உசேன் மற்றும் இரவு விருந்து வழங்கிய நபரை பாராட்டி வருகின்றனர். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு என்பது இருந்து வருகிறது. இப்படியான சூழலில் ஈரானில் தவித்த நம் நாட்டின் விலாக்கருக்கு உசேன் உதவி செய்து இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications