காசாவில் ஐநா அதிகாரிகள் பயணித்த கார் மீது தாக்குதல்! முக்கிய செயல்பாடுகள் நிறுத்துவதாக அறிவிப்பு
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவில் ஐ.நா உணவு நிறுவனத்தின் (WFP) வாகனம் ஒன்று திடீரென தாக்குதலுக்கு உள்ளானது. இப்படி நடப்பது முதல் முறை என்பதால், WFP காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,435ஆக இருக்கிறது. இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 93,534 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 25 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இப்படியாக நிலைமை மோசமடைந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கின. எனவே, அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன. இவை அனைத்தும் இஸ்ரேல் ஆதரவு நாடுகள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பணய கைதிகளை விடுவித்தல், தாக்குதலை கைவிடுதல் என இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்க முன்வந்தது. இப்படி இருக்கும்போதுதான் போரை தீவிரப்படுத்துவதை போன்ற சம்பவம் ஒன்று நடந்தது.
அதாவது ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் ஹமாஸ் அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், போர் காரணமாக ஐநாவின் உதவி மையத்தை காலி செய்ய இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே இஸ்ரேல் எச்சரிக்கை காரணமாக, ஐநா தனது உதவி மையத்தை காலி செய்திருந்தது. தற்போது மீண்டும் சொல்லியிருப்பதால்.. ஐநாவின் உதவி வழங்கும் செயல்பாடுகளை இஸ்ரேல் முடக்குகிறதா? என்று கேள்வி எழுந்திருந்தது.
இப்படி இருக்கையில், காசாவில் இஸ்ரேல் சோதனை சாவடியில் ஐ.நா உணவு நிறுவனத்தின் வாகனம் ஒன்று தாக்குலுக்கு உள்ளாகியுள்ளது. தெற்கு காசாவில் ஒரு பணியை முடித்துவிட்டு வாடி காசா பாலத்தில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) சோதனைச் சாவடிக்கு அருகே வந்தபோது இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சோதனைச் சாவடிக்கு அருகில் ஐ.நா உணவு நிறுவனத்தின் (WFP) வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். எனவே, காசாவில் தனது செயல்பாடுகளை WFP நிறுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications