பிரதமர் மோடி வரவேற்புக்காக பாரம்பரியத்தையே கைவிட்ட பப்புவா நியூகினியா! வியந்துபோன உலக நாடுகள்! ஆஹா
மோர்ஸ்பி: பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூகினியா நாட்டுக்கு சென்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்காக அந்த நாட்டின் ஜேம்ஸ் மரப் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தையை மாற்றியமைத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி 6 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதன்பிறகு குவாட் மாநாட்டில் பங்கேற்றதோடு, அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.

நேற்று முன்தினம் ஜப்பான் பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார். இங்கு இந்தியாவின் பிரதமர் யாரும் இதுவரை செல்லவில்லை. நரேந்திர மோடி தான் முதல் முறையாக அங்கு சென்றார்.
இதனால் பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது. பப்புவா நியூகினியாவின் தலைநகரான மோர்ஸ்பி விமான நிலையத்தில் பிரதமர் மோடி இறங்கினார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரப் நேரடியாக சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். மேலும் மோடியின் பாதங்களை தொட்டு வணங்கினார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பப்புவா நியூகினியா தனது பாரம்பரிய வழக்கம் மற்றும் மரபுகளை கைவிட்டுள்ள நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. பப்புவா நியூகினியா நாட்டில் காலம்காலமாக ஒரு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மாலையில் சூரியன் மறைவுக்கு பின்னால் வரும் உலக தலைவர்களுக்கு பப்புவா நியூகினியா சார்பில் சம்பிரதாய வரவேற்பு அளிப்பதில்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பப்புவா நியூகினியா நாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்க அந்நாட்டில் பிரதமராக இருப்பவர் நேரில் செல்வது இல்லை. ஆனால் பிரதமர் மோடியை வரவேற்க அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரப் நேரடியாக சென்றதோடு, காலை தொட்டு வணங்கினார். மேலும் பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடிக்காக அந்த நாடு வழக்கத்தில் உள்ள மரபுகளை கைவிட்டுள்ளது. இதனை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளன.
இதையடுத்து நேற்று மோர்ஸ்பி நகரில் நடந்த நிகழ்ச்சியில், பப்புவா நியூகினியா நாட்டின் அலுவல் மொழியான டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 'திருக்குறள்' நூலை பிரதமர் மோடியும், பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மரப்பும் கூட்டாக வெளியிட்டனர். இந்த நூலை தமிழர்களான வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண கவர்னர் சசிந்திரனும், அவருடைய மனைவி சுபா சசிந்திரனும் மொழிபெயர்த்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற 14 பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு பிஜி தீவின் உயரிய விருதான 'கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி', பப்புவா நியூகினியா நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோகு' ஆகிய விருதுகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கு பாடுபட்டதற்காக விருதுகள் வழங்கப்பட்டன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் போன்ற ஒருசில வெளிநாட்டினருக்கு மட்டுமே இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரதமர் மோடி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications