டூத்பேஸ்ட், பிரஷ், ஒரு செட் டிரஸ், ஊசி, மருந்து... கடலில் கரையும் சிரிய அகதிகளின் சொத்து இதுதான்!
டமாஸ்கஸ்: சிரியாவிலிருந்து அபாயகரமான கடல் பயணமாக படகுகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அலை அலையாக செல்லும் சிரிய மக்கள் கொண்டு வரும் உடமைகளைப் பார்த்தால் மனதெல்லாம் வேதனையாகி விடும்.
உயிரைப் பணயம் வைத்து படகுகளில் ஏறி பயணம் மேற்கொள்ளும் இவர்கள் படகுகளில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் அதிக அளவிலான பொருட்களை தங்களுடன் எடுத்து வர முடியாத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக மிக மிக சிறிய அளவிலான பொருட்களையே தங்களது உடமைகளாக புதிய தேசம் நோக்கி எடுத்து வரும் அவலம் காணப்படுகிறது. அவர்கள் எடுத்து வரும் பொருட்களை (சொத்துக்களைப்) பார்த்தால் மனம் வாடி விடும்.

6 வயது ஒம்ரானின் உடமை இது
டமாஸ்கஸைச் சேர்ந்த 6 வது ஒம்ரான் ஒரு ஸ்கூல் பேக்கை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு வந்துள்ளான். இவனது பையைத் திறந்து பார்த்தால் அதில், ஒரு செட் பேன்ட், ஒரு சட்டை, ஒரு சிரிஞ்சு, ஸ்வீட் கிரீம், சோப், டூத் பிரஷ், பேஸ்ட், பேன்டேஜ் ஆகியவை மட்டுமே உள்ளன. சிரித்த முகத்துடன் காணப்படுகிறான் ஒம்ரான்.. வருங்காலமாவது வசந்தமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில்.

17 வயது இக்பால்
இது 17 வயது இக்பால். இவர் ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனசு நிறைய கனவுகள். தலை முடியை ஸ்பைக் செய்ய வேண்டும் என்பது அதில் முக்கியமானது. ஆனால் தற்போது தான் ஒரு அகதி என்பதால் அதைச் செய்ய விரும்பவில்ல என்கிறார் சிரித்தபடி. இவரது பையில் ஒரு ஜோடி பேன்ட், சட்டை, ஷூ, சாக்ஸ், ஷாம்பு, டூத் பிரஸ், பேஸ்ட், முக கிரீம், சீப்பு, நெயில் கட்டர், பேன்டேஜ், 100 டாலர் அமெரிக்கப் பணம், 130 துருக்கிப் பணம், ஸ்மார்ட் போன், சாதாரண செல்போன், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கியைச் சேர்ந்த சிம் கார்டுகள் ஆகியவை உள்ளன.

ஒரு கலைஞரின் உடமை
சிரியாவைச் சேர்ந்த 20 வயதான நூர் ஒரு கலைஞர் ஆவார். இவர் 2 பைகளை எடுத்து வந்துள்ளார். ஆனால் சட்டவிரோத படகோட்டிகள் ஒரு பையை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதித்ததால், ஒரு பையை விட்டு விட்டாராம்.அவரது பையில் தனது நண்பர் கொடுத்த கிப்ட் (அதைத் தரையில் கூட வைக்காமல் கையிலேயே வைத்துள்ளார்), காதலி கொடுத்த கைக்கடிகாரம் (பயணத்தின்போது உடைந்து விட்டதாம்), சிரிய கொடி, பாலஸ்தீனிய பிரேஸ்லெட், கிதார், செல்போன், சிரிய சிம் கார்டு, ஒரு சட்டை, புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றை வைத்துள்ளார்.

10 மாதக் கைக்குழந்தையுடன் வந்த தாய்
20 வயதான அபோசியா, சிரியாவைச் சேர்ந்தவர். இவரது கையில் 10 மாதக் கைக்குழந்தை உள்ளது. அதன் போயர் டோவா. ரப்பர் படகில் ஏறி இவர்கள் வந்துள்ளனர். இவரது பையில் குழந்தையின் தொப்பி, ஸ்டெரைல் வாட்டர், குழந்தை உணவு ஒரு ஜார், நாப்கின்ஸ், டயாப்பர், குழந்தையின் காலில் மாட்டும் சாக்ஸ், பெயின் ரிலீவர், டூத் பேஸ்ட், குழந்தைக்கான தடுப்பூசி அட்டவணை, கொஞ்சம் பணம், செல்போன் சார்ஜர், ஹெட்பேன்ட் ஆகியவை இருந்தன. இவரது பொருட்களில் பெரும்பாலானவை அவரது குழந்தை தொடர்பானது.. தாயலலவா.. தன்னை விட குழந்தையை அதிகம் நினைத்துள்ளார் இவர்.

31 பேர் கொண்ட குடும்பத்தின் சொத்து இது
இது 31 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் உடமை. மொத்தம் 7 பெண்கள், 4 ஆண்கள், 20 குழந்தைகள். வரும் வழியில் இவர்களது பை தொலைந்து போக ஒரு பை மட்டுமே் மிஞ்சியது. அதில், ஒரு ஜோடி சட்டை பேன்ட், ஷூக்கள், டயாப்பர், 2 சிறிய பால் பவுடர் பாக்கெட்கள், சில பிஸ்கட்கள், பணம், சானிட்டரி பேட், சீப்பு ஆகியவை மட்டுமே உள்ளன.
உடமைகள் சிறிதளவே இருந்தாலும் கூட இவர்களிடம் நம்பிக்கை நிறையவே உள்ளது... நல்ல மனிதர்களையும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கை அது!
படங்கள்: சர்வதேச மீட்புக் கமிட்டி












Click it and Unblock the Notifications