உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ்.. 1 மாதத்துக்கு பிறகு முதல் முறையாக போட்டோவை வெளியிட்ட வாட்டிகன்!
வாட்டிகன்: போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது முதல் புகைப்படத்தை வாட்டிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) அண்மைக் காலமாகவே வயோதிகம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதியுற்று வருகிறார். சிறு வயதிலேயே போப் பிரான்சிஸுக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நாள்பட்ட நுரையீரல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக குளிர்காலத்தில் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் மூச்சுக்குழாய் அழற்சி மோசமடைந்ததை அடுத்து போப் ஆண்டவர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்களின் அதிதீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். போப் ஆண்டவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸ் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.
தற்போது போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறி உள்ளார். அவர் ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படத்தை வாட்டிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு, தற்போது தான் முதல் படம் வெளியாகி உள்ளது.
இந்தப் புகைப்படத்தில் போப் பிரான்சிஸ், வழக்கமாக அணியும் வழிபாட்டு உடை, ஊதா நிற ஸ்டோல் அணிந்து தேவாலயத்தில் பலிபீடத்தின் முன்பாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப் ஆண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது. மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்து, போப் ஆண்டவர் உடல்நிலைக்காக பிரார்த்தித்தனர்.












Click it and Unblock the Notifications