வேலை நேரம் முடிஞ்ச பிறகும்கூட உங்க பாஸ் டார்ச்சர் பண்றாரா? ஆப்பு வைத்து அரசு..ஊழியர்கள் செம ஹேப்பி
லிஸ்பன: கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அதிகரித்து வரும் நிலையில், வேலை நேரத்திற்குத் தாண்டி ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் கால் செய்வதைச் சட்ட விரோதமாக இந்த நாடு அறிவித்துள்ளது.
என்ன தான் 8 மணி நேரம் மட்டும் வேலை நேரம் என இருந்தாலும் கூட, நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது. வேலை நேரம் முடிந்த பின்னரும் ஆபிஸ்களில் இருந்து கால் வருவது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
அதிலும் கொரோனா காலகட்டத்தில் Work From Home முறையால் வேலை நேரம், தனிப்பட்ட நேரத்திற்கும் இடையே பெரியளவில் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டம்
இப்படி வேலை நேரம் முடிந்த பின்னரும் உங்களில் பெரும்பாலான நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து கால் வந்திருக்கும். இதுபோன்ற கால்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்காகவே புதிய சட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், நம் நாட்டு அரசு இல்லை போர்ச்சுகல் அரசு. ஊழியர்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலையைக் கொண்டிருக்க வழிவகை செய்ய இந்தப் புதிய சட்டம் போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டம்
கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் அலுவலகம் சார்ந்த பணிகள் அதிகரிப்பதால் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த சட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பேர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறியுள்ளது.

போர்ச்சுகல் அரசு
அதன்படி பணி நேரம் முடிந்த பிறகு கால் செய்யும் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், வீடுகளில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு எரிபொருள், இணையம் மற்றும் மின்சாரம் எனக் கூடுதலாக ஆகும் செலவுகளையும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களே செலுத்த வேண்டும் என அந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. போர்ச்சுகலில் ஆட்சியில் உள்ள சோசலிஸ்ட் கட்சி வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், அவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதில்லை.

ஊழியர்களுக்கு ஆதரவான சட்டங்கள்
முன்னதாக போர்ச்சுகல் அரசு இதேபோல "right to disconnect" என்ற சட்டத்தை முன்மொழிந்திருந்தது. அதன்படி வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சாதனங்களை ஆப் செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த சட்ட வரைவுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதேபோல வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களின் உற்பத்தித் திறன் (productivity) தடை விதிக்கவும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது மற்ற ஊழியர்களுடன் நேருக்கு நேர் சந்திப்பதை உறுதி செய்யவும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அமைச்சர் விளக்கம்
அதேபோல குழந்தைகளுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு, நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறாமல், அவர்களது குழந்தைகளுக்கு எட்டு வயதை அடையும் வரை, வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கும் சட்டமும் இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டங்கள் என்பது போர்ச்சுகல் அரசின் திட்டம் தான் என்றாலும் கூட கொரோனா பாதிப்பு இந்த சட்டங்களை விரைவாகக் கொண்டு வர உதவியதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications