'சைஸ்' பெரிதாக இருந்தாலும் 'ஐஸ்' மாதிரி ஆடலாம் 'டான்ஸ்'... ஒரு தன்னம்பிக்கை மனுஷி...
நியூயார்க்: முயற்சி இருந்தால் மணலைக்கொண்டு கூட கயிறு திரிக்க இயலும் என்பது போல்,குண்டாய் இருப்பவர்களாலும் நடனம் ஆட முடியும் என நிரூபித்துள்ளார் "வொய்ட்னி தோர்" என்ற அமெரிக்கப் பெண்மணி.
இதன் மூலம் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் இவர்.
குண்டான பெண்ணின் நடனம் என்ற பெயரில் இவரது நடன வீடியோ தயாரிக்கப்பட்டு அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த ஆல்பத்தில் இவர் ஆடும் நடனம், அபாரமாக இருக்கிறது. இவரது உடல் எடைக்கு முன்பு, இவரது நடனத் திறமை ரொம்பப் பெரிதாக தெரிகிறது.

நடனப் புயல்:
சிறந்த வலைஞரும், ரேடியோ ஒருங்கிணைப்பாளருமான வொய்ட்னி தோர், தனது நான்கு வயது முதல் நடனம் ஆடுவதுடன் கீரீன்ஸ்போரோ நடனப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

திடீர் மாற்றம்:
இந்நிலையில் கல்லூரியில் சேர்ந்த தோர் திடீரென்று உடல் எடை கூடுதல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டார்.அதற்கான பரிசோதனையின் போது அவர் கருப்பை நீர்க் கட்டிகளால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் மனதளவிலும்,உடலளவிலும் பாதிக்கப்பட்ட தோரால் தொடர்ந்து நடனம் ஆட முடியாமல் போனது.

மலைக்க வைத்த எடை:
தோர் தனது கல்லூரிப் படிப்பை முடித்து கொரியா திரும்பினார். அப்போது அவரின் எடை கிட்டதட்ட 200 பவுண்டாக இருந்தது.ஆனாலும் அவர் மனதை தேற்றிக்கொண்டு நடனத்தை தொடர்ந்தார்..ஆனால்,தான் மறுபடியும் நடன ஆசிரியர் ஆக முடியும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்.

குண்டான பெண்ணின் நடனம்:
அவருடன் வேலை செய்த ரேடியோ தொகுப்பாளரான ஜரெட் பைக் ,தோரை "பேட் கேர்ள்ஸ் ஆல்பம்"என்ற ஒரு வீடியோ தொகுப்பிற்கு சிபாரிசு செய்துள்ளார். அதை ஏற்ற தோரும் மிகச்சிறப்பான நடனம் ஆடியுள்ளார்.

எடை தடையல்ல:
இத்தொகுப்பானது உடல் எடை மிகுந்தவர்களின் மனக்குறையை போக்கவும்,எடை என்பது எதற்கும் தடையானது அல்ல என்பதையும் உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னுதாரணம்:
இதைப்பற்றி தோர் கூறியபோது ,"குண்டாக இருக்கிறோம் என வருத்தப்படும் பெண்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கவே விரும்புகிறேன்.நான் எப்பொழுதும் இதற்காக வருத்தப்பட்டதில்லை"என்றார்.

சாதனை மனுஷி:
வாழ்க்கையில் சிறிய இழப்புகளுக்கு கூட துவண்டு போகும் மனிதர்களின் நடுவில் எடை எதற்கும் தடையல்ல என நிரூபித்திருக்கும் இச்சாதனை மனுஷி உடலால் மட்டும் அல்ல மனதாலும் பெரிதாகவே தெரிகிறார்.












Click it and Unblock the Notifications