“ஈரான் தலைவரை, இஸ்ரேல் கொன்றுவிட்டால்.. நீங்கள் என்ன செய்வீர்கள்?” - புதின் பதில் இதுதான்
மாஸ்கோ: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு, தற்போது ஈரான் சரமாரியாக பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரான் தலைவரை இஸ்ரேல் கொலை செய்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கொடுத்த பதில் கவனம் பெற்றிருக்கிறது.
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில், சர்வதேச செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களை புதின் கடந்த 18ம் தேதி சந்தித்திருந்தார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு புதின் பதிலளித்திருந்தார்.

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, ஈரான் தலைவர் காமெனியை கொலை செய்துவிட்டால் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு புதின், "இப்படியான சாத்தியங்கள் குறித்து நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை. இது கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர் இந்த கேள்வியை எழுப்ப காரணம் இருக்கிறது. இஸ்ரேலுக்கும்-ஈரானுக்கும் இடையே சண்டை தொடங்கியபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது பற்றி வாய் திறந்திருந்தார். "ஈரான் தலைவர் காமெனி எங்கு பதுங்கியிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், அவரை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். உடனே எங்களுடன் ஒப்பந்தத்திற்கு வாருங்கள். நிபந்தனையின்றி சரணடையுங்கள்" என்று கூறியிருந்தார். காமெனியை கொல்ல மாட்டோம் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், இஸ்ரேல் காமெனியை கொல்வதையே இலக்காக வைத்திருக்கிறது.
இதற்கு அமெரிக்கா உதவியும் செய்யும். செய்துவிட்டு, எங்களுக்கு எதுவும் தெரியாது. இஸ்ரேல்தான் கொன்றது என்று பழியை தூக்கி அந்நாட்டின் மீது போட்டுவிடும். இந்த பின்னணியில்தான் பத்திரிகையாளர், காமெனியின் கொலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஈரான் அரசியல் தொடர்பாகவும் புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இன்று ஈரானில் அரசியல் சலசலப்புகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். அதாவது ஈரானில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அமெரிக்க, இஸ்ரேலின் இரண்டாவது திட்டம்.
அரசியல் கிளர்ச்சியை தூண்டிவிட்டு, அமெரிக்காவுக்கு ஆதரவான ஒரு அரசை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இருப்பினும் ஈரான் மக்கள் அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள். இதைத்தான் புதின் தனது பதிலில் விளக்கியுள்ளார். மேலும் ஈரான்-இஸ்ரேல் விஷயத்தில் பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்வு காண முடியும் என்பதை தாம் உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார். அதேபோல இஸ்ரேலின் தாக்குதலையும் கண்டித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications