புதின் உடனான பேச்சுவார்த்தையில் பெருசா ஒன்னும் நடக்கல! உக்ரைன் போர் எப்போது முடியும்? டிரம்ப் பதில்
கீவ்: அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியிருந்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் பெரியதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு டிரம்ப் பதிலளித்திருக்கிறார்.
உக்ரைனில் அமெரிக்க ஆதரவாளரான ஜெலன்ஸ்கிதான் அதிபராக இருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடுத்திருக்கிறது. இந்த போரை நிறுத்த முடியுமா? முடியாதா? என்பதை பேசி தீர்க்க இன்று அலாஸ்காவில் டிரம்ப்-புதின் சந்தித்தனர். ஆனால் இறுதிவரை தீர்வு எட்டப்படவில்லை. எனவே போர் நிறுத்தம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

புதினுடன் பேசினோம், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் அது ஒப்பந்தம் அளவுக்கு முன்னேறவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியெனில் போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அர்த்தம். எதிரி நாட்டு தலைவர்களுடன் டிரம்ப் பேசுவது இது ஒன்றும் புதியது கிடையாது. கடந்த முறை அவர் அதிபராக இருந்தபோது வடகொரிய அதிபரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவும் மேம்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
அதே கதைதான் இங்கும். டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாததால் போர் நிறுத்தம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே போர் தொடரும் என்றே சொல்லப்படுகிறது.
இந்த போருக்கு முக்கிய காரணம் அமெரிக்காதான். அதாவது நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயன்றது. இதற்கு அமெரிக்காவும் ஓகே சொல்ல, வேறு வழியில்லாமல் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடுத்திருக்கிறது. இந்த போர் குறித்து அலாஸ்கா கூட்டத்தை முடித்து பேசிய டிரம்ப், "உக்ரைன் போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கி கையில்தான் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
மறுபுறம் புதின் பேசுகையில், "போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்த நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். அந்த சமயத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் போரே வந்திருக்காது என்று கூறியிருந்தார். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எங்களுடைய பாதுகாப்புக்கு உக்ரைன் செயல்பாடுகள் அச்சுறுத்தலாக இருக்கிறது" என்று புதின் கூறியிருந்தார்.
இதில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். உலகின் அமைதி தூதுவராகவும், மிகச்சிறந்த பேச்சுவார்த்தையாளராகவும் தன்னை காட்டிக்கொண்ட டிரம்ப் இந்த சந்திப்பு முடித்து கிளம்பும்போது இரண்டு அடையாளங்களையும் அலாஸ்காவிலேயே தொலைத்துவிட்டு சென்றிருக்கிறார். அவரால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. மட்டுமல்லாது ரஷ்யாவுடன் எந்த ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை. இது முதல் விஷயம்.
இரண்டாவது விஷயம் என்னவெனில், உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் மீண்டும் தொடங்கும் என்பதுதான். இந்த போரை அமெரிக்கா நினைத்தால் முடிவுக்கு கொண்டுவர முடியாது. ரஷ்யாதான் நினைக்க வேண்டும் என்பது இந்த பேச்சுவார்த்தையில் தெளிவாக தெரிந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications