காலை 9 மணிக்கு மெட்ரோ ரயிலில் ஏறி 9.11 மணிக்கு பலியான ராகவேந்திரன் கணேசன்
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜினியர் ராகவேந்திரன் கணேசன் பணிக்கு செல்ல காலை 9 மணிக்கு மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார் 9.11 மணிக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ராகவேந்திரன் கணேசன். சாப்ட்வேர் என்ஜினியர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புராஜெக்ட் விஷயமாக அவரை இன்போசிஸ் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு அனுப்பி வைத்தது.
பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்த ராகவேந்திரனுக்கும் சென்னையை சேர்ந்த வைஷாலிக்கும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மனைவி
திருமணத்திற்கு பிறகு அவர் மனைவியை பிரஸ்ஸல்ஸ் அழைத்துச் சென்றார். கர்ப்பமான வைஷாலி பிரசவத்திற்காக சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது.

பாரீஸ்
ராகவேந்திரன் கடந்த ஆண்டு பிரான்ஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பாரீஸ் நகரில் உள்ள நாட்டர் டாம் தேவாலயத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.

மெட்ரோ
ராகவேந்திரன் வழக்கமாக மெட்ரோ ரயிலில் தான் பணிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 22ம் தேதி அவர் மான்ட்கோமரி ரயில் நிலையத்தில் சுமார் 9 மணிக்கு ரயிலில் ஏறியுள்ளார். 9.11 மணிக்கு மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அதே ரயிலில் ஏறிய தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் ராகவேந்திரன் பலியானார்.

மரணம்
திருமணமாகி 2 ஆண்டுகள் 2 நாட்கள் ஆன நிலையில் ராகவேந்திரன் கணேசன் பலியாகியுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி பலரும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
