சிங்கப்பூர்: பஸ்சிலிருந்து தமிழ்த் தொழிலாளர் விழுந்து பலியானதால் மோதல் -தடியடி - பலர் கைது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தமிழரான பஸ் பயணி ஒருவர் பஸ்சிலிருந்து கீழே விழுந்து பலியானதால் லிட்டில் இந்தியா பகுதியில் மோதல் வெடித்தது. இதில் சில வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து தமிழர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், பலரைக் கைது செய்தும் உள்ளனர்.
27க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் குடித்து விட்டு கலாட்டாவிலும், வன்முறையிலும் ஈடுபட்டதாக சிங்கப்பூர் போலீஸார் கூறுகின்றனர்.

லிட்டில் இந்தியா
சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டவர் வேலை நிமித்தமாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் லிட்டில் இந்தியா எனப்படும் பகுதியில் வார இறுதி நாட்களில் கூடி சந்தித்துக் கொள்வர். தமிழர்கள் மட்டுமல்லாமல் தெற்காசியர்களுக்கான சிறந்த பொழுதுபோக்குமிடமாக இது உள்ளது.

பஸ்சிலிருந்து விழுந்த தமிழ்த் தொழிலாளர்
இதேபோல நேற்றும் அங்கு பெரும் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்ற 33 வயது தொழிலாளர் தனியார்ப் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்து விட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.

கட்டுமானத் தொழிலாளர்
சக்திவேல் குமாரவேலு, சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலில் பணியாற்றி வந்தார். ஹெங் ஹுப் சூன் என்ற நிறுவனத்திற்காக பணியாற்றியவர். கடந்த 2 வருடமாக அங்கு அவர் தங்கியிருந்து வந்தார். சக்திவேலின் உடல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சவக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

பஸ் மீது தாக்குதல்
தொழிலாளர் கீழே விழுந்து இறந்ததால் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிலர், அந்த பஸ்சைத் தாக்கி சேதப்படுத்தினர்.

சிங்கப்பூர் போலீஸ் தடியடி
இதையடுத்து சிங்கப்பூர் போலீஸார் - இவர்களில் பலர் சீன வம்சவாளியினர் - போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் இரண்டு போலீஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் அந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸும் தாக்கி தீவைக்கப்பட்டது.

25க்கும் மேற்பட்டோர் கைது
இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இதையடுத்து தமிழர்கள் சிதறி ஓடினர். 25க்கும மேற்பட்ட தமிழர்களைப் போலீஸார் கைது செய்து பிடித்துச் சென்றனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக புகார்
கைது செய்யப்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களை கோர்ட்டில் நிறுத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் மேலும் சவுக்கடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி திரும்பியது
தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் அமைதி நிலவுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் எச்சரிக்கை
இந்த மோதல் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், கலவரம் ஏற்பட என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற செயலை ஏற்க முடியாது என்றார். மேலும் அவர் கூறுகையில், சட்டப்படி கலவரத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்போம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோபத்தின் வெளிப்பாடு
சிங்கப்பூரைப் பொறுத்தவரை அங்கு சீன வம்சவாளியினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கு இந்தியர்களைப் பிடிக்காது. குறிப்பாக தமிழர்களைப் பிடிக்கவே பிடிக்காது. இவர்களிடமிருந்து சந்தித்து வரும் அடக்குமுறையின் கோப வெளிப்பாடே இந்த திடீர் மோதல் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனப் புழக்கம்
இதுகுறித்து அங்கு வேலை பார்த்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், மனம் போன போக்கில் நடந்த வன்முறையாக இதைப் பார்க்க முடியவில்லை. இத்தனை நாட்களாக மனதுக்குள் போட்டுப் புழுங்கி வந்ததன் வெளிப்பாடாகவே தெரிகிறது என்றார்.

1969க்குப் பிறகு
1969ம் ஆண்டு சிங்கப்பூரில் இன ரீதியான மோதல்கள் வெடித்தன. அதன் பிறகு அங்கு அதுபோன்ற மோதல் வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக வந்திருப்பதால் சிங்கப்பூரில் பதட்டம் காணப்படுகிறது.

தெற்காசியர்களை நம்பி
சிங்கப்பூர் தனது அன்றாட பணிகளுக்குக் கூட வெளிநாட்டவர்களைத்தான் நம்பியுள்ளது. குறிப்பாக தமிழர்கள் இல்லாமல் அங்கு ஓரணுவும் அசையாது என்ற நிலைதான். தமிழர்கள் தவிர வங்கதேசத்தவர்கள் உள்ளிட்ட தெற்காசியர்களும் கணிசமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் மூலம் இனவெறிப் பிரசாரத்தில்
லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்போது இந்திய வம்சாவளியினர் மீது இணையதளம் மூலம் சிங்கப்பூரைச் சேர்ந்த சீன வம்சவாளியினர் இன துவேஷப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications